குபேரனை போன்று செல்வம் பெற என்ன செய்வது?
குபேரனை போன்று செல்வம் பெற வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசையாகும். ஏன் என்றால்இன்றைய பொருளாதார சூழலை சமாளிக்க பணம் மிகவும் அவசியமாகும். பணம் வாழ்க்கையில் பிரதானமான ஒன்றாக மாறிவிட்டது. வாழ்க்கை எப்படி நிலை இல்லாததோ அது போன்று செல்வமும் நிலை இல்லாதது. ஆனால் நம் அன்றாட வாழ்க்கை நடத்தவும், சமூகத்தில் மரியாதையுடனும் வாழ பணம் தேவைபடுகிறது.
பணத்தை பலரும் பல வகையில் சேமிக்க முயன்று கொண்டு இருக்கின்றனர். சிலரிடம் செல்வம் அதிக அளவில் இருக்கும், சிலரிடம் செல்வம் குறைவாக இருக்கும், சிலருக்கு சம்பாதித்த செல்வத்தை சேமிக்க தெரியாமல் இருக்கும், சிலர் எப்படி சம்பாதித்து சேமித்து வைத்தாலும் செல்வம் தங்காமல் இருக்கும்.
செல்வ வளம் நம்மிடம் நிறைந்திருக்க நேர்மையாக உழைப்பதோடு மட்டுமல்லாமல் அதிர்ஷ்டமும், லக்ஷ்மி கடாட்சமும் நம்மிடம் இருக்க வேண்டும். அதற்க்கு மகாலக்ஷ்மியின் அருள் முழுமையாக கிடக்க வேண்டும். மகாலக்ஷ்மியை வழிபாட்டு தான் குபேரன் சகல செல்வங்களுக்கும் அதிபதியானார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். குபேரன் எப்படி வழிபாடு செய்து மகாலஷ்மியின் அருளை முழுமையாக பெற்றாரோ அது போன்று நாமும் வழிபட நமக்கும் சகல செல்வங்களும் கிடைக்கும்.
குபேரன்
சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்த குபேரன் செய்த தவத்தின் பயனாக, செல்வத்திற்கு அதிபதியாக சிவபெருமானால் நியமிக்கப்பட்டார். நவநிதிகளுக்கும் அதிபதியாக இருந்த காரணத்தால், ஸ்ரீமன் நாராயணனின் திருமணத்திற்கே கடனுதவியாக பல லட்சம் கோடிகளை கொட்டி கொடுத்தான்.
அத்தகைய குபேரனுக்கு, ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் நாடு, நகரம் அனைத்தையும் இழந்து வறுமை ஏற்பட்டது. அதையடுத்து, சிவபெருமானிடம் சென்று தன்னுடைய நாடு, நகரமெல்லாம் திரும்ப கிடைக்க என்ன செய்வது என்று குபேரன் கேட்டார். அதற்கு சிவபெருமான் பதில் கூறுகையில், உனது வீட்டில் அல்லது தோட்டத்தில் அதிக நெல்லி மரங்களை வளர்த்து விட்டு என்னை வந்து பார் என்று கூறினார்.
சிவபெருமான் கூறியதுபோல், ஆயிரக்கனக்கான நெல்லி மரங்களை குபேரன் வளர்த்து வந்தார். நெல்லி மரம் பூ பூத்தது. பூவெல்லாம் காய் ஆகின, காய்களெல்லாம் பழம் ஆனது. அதையடுத்து, குபேரனை எதிர்த்த அரசன் தானாக வந்து கப்பம் கட்டினான். செல்வம் பெருகியது, நாடு நகரமெல்லாம் திரும்ப கிடைத்தது. அதனால், ஆச்சரியமடைந்த குபேரன், இது எப்படி சாத்தியமானது? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே என்று சிவபெருமானிடம் கேட்டான்.
நெல்லி மரம் என்பது மகாலட்சுமியின் சொரூபம். நீ தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது நெல்லி மரங்களை அல்ல, லட்சுமி தேவிகளை. எந்த அளவிற்கு லட்சுமி தேவி வளர்ந்து உன் வீட்டில் நெல்லி மரங்களாக பெருகி நின்றதோ அதே போல் உன்னுடைய செல்வ வளமும் பெருகியது.
மகாலட்சுமி இருக்கும் இடத்தில் வறுமைக்கு இடமில்லை என்பதால் தான் இந்த பரிகாரத்தை கூறினேன் என்று சிவபெருமான் தெரிவித்தார். நெல்லி மரம் வளர்த்து வந்தால் செல்வ வளம் பெருகும் என்பது அனுபவபூர்வ உண்மையாகும். எனவே குபேரனை போன்று செல்வம் பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டிலும் நெல்லி மரம் வளர்ப்பது மகா லட்சுமி கடாட்சத்தை பெற்றுத்தரும்.
குபேர லட்சுமி பூஜை
ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்யவேண்டிய பூஜை குபேர லட்சுமி பூஜையாகும்.
இதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் பெறமுடியும்.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும்.
இந்த நேரத்தில் நாமும் மகாலஷ்மியை மனதார பிரார்த்தனை செய்து சகல செல்வங்களையும் பெற்றிடலாம்.