அன்னாபிஷேகம் சிறப்புகள்
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 15.11.2024 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இந்த உலகில் சகலத்தையும் படைத்து அதற்கான உணவையும் கொடுத்து காத்து ரட்சிக்கும் ஈசனுக்கு உணவையே அபிஷேகமாக அளித்துக் கொண்டாடப்படும் விழாவே அன்னாபிஷேக விழாவாகும்.

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடத்தபடுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி அன்று ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷமானதாகும். ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று அஸ்வினி நட்சத்திரம் இருப்பதால் அஸ்வினி நட்ச்சத்திரத்திற்கு உரிய அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கம் முழுமையாக அன்னத்தினால் மூடி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். தற்போது அன்னத்தோடு காய்கறிகளையும் சேர்த்து சிவனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த இந்த அன்னத்தை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவ பெருமான் அபிஷேக பிரியர் ஆவார். இவருக்கு ஐப்பசி பெளர்ணமி தினத்தில் தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள் மற்றும் அன்னம் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து இறைவனின் அருளை பெறுகிறோம்.
இந்த அன்னாபிஷேகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட அன்னம் இரண்டு நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் அப்படியே வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் யஜுர் வேத பாராயணம், ருத்திரம், சமகம் ஆகியவை பாராயணம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
அன்னாபிஷேக பலன்கள்
‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கு அர்த்தம் சிவபெருமானை அன்னாபிஷேக அலங்காரத்தில் கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்துவதாகும்.
அன்னாபிஷேகத்தன்று அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமானை அன்னதிருமேனியில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்னாபிஷேகத்தில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அன்னபிஷேகத்திற்கு முந்தைய நாளே உங்களால் முடிந்த அளவு பச்சரிசியை வாங்கி கொடுக்கலாம். சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தில் நீங்கள் வாங்கி கொடுத்த அரிசியில் ஒரு பருக்கை இருந்தாலும் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் பரம்பரைக்கே கோடி புண்ணியமாகும்.