Home Tags மார்கழி கோலம்

Tag: மார்கழி கோலம்

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி திருவெம்பாவை இயற்றி மார்கழி மாத விடியற்காலையில் பாடியுள்ளார். மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் கோயில்களிலும் கூட சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது திருவெம்பாவை ஆனது அனைத்து சிவன் கோவில்களிலும் அப்போது பாடப்படும்.

மார்கழி மாதத்தின் சிறப்புகள்

பாவை நோன்பு, வைகுந்த ஏகாதசி, ஸ்ரீஹனுமந்த் ஜெயந்தி, சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் என அனைத்து இறைவழிபாடுகளும் மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. சபரி மலை விரதம், பூஜை, வழிபாடு என இவை அனைத்தும் கூட மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. மொத்தத்தில் மார்கழி அது தெய்வங்களுக்கான மாதம் அல்லது ஆன்மீக மாதம் என்று கூட சொல்லலாம். இந்த மாதத்தில் தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மொத்தத்தில், தெய்வங்களை தொழுவதற்கென்றே உள்ள மாதம் தான் மார்கழி.

பிரம்ம முகூர்த்த மாதம்

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவ உலகில் ஒரு நாள் எனப்படுகின்றது. அதில் மார்கழி மாதமானது தேவலோகத்தில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தம் ஆகின்றது. இந்தக் பிரம்ம முகூர்த்தகால வழிபாடு, தியானம் இவற்றுக்கு மட்டுமே உகந்த காலம் எனப்படுகின்றது. எனவே தான் இம்மாத மாலை நேரங்களில் இறை வழிபாட்டின் ஒரு பிரிவான பாட்டு, நடனம், கச்சேரிகள் நடைபெறுகின்றன. இந்த மாத காலத்தில் தான் ஸ்ரீரங்கம் கோயிலில் இராப் பத்து, பகல் பத்து போன்ற விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

மார்கழி அதிகாலை கோலமிடுவது ஏன்?

மார்கழி மாதத்தில் அதிகாலை கோலம் இடுவது கூட அதிக நன்மையை தரக்கூடியது. இதற்கு ஒரு காரணம் உண்டு. விஞ்ஞான ரீதியாக மார்கழி மாதத்தில் ஆக்ஸிஜன் நிறைந்த ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்பதால் அதிகாலை நேரத்தில் கோலம் போடுவதன் மூலம் நல்ல ஆக்ஸிஜன் பெற்று உடல் ஆரோக்கியம் அடையும்.

மார்கழி சிறப்புகள்

1. ரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவி, பாம்பன் சுவாமிகள் ஆகியோர் மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள்.

2. மார்கழியில்,திருவாதிரை கொண்டாட்டத்தில் சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

3. பெண்கள் பாவை நோன்பின் மூலம் ஆதிசக்தி அன்னையை வழிபடுகின்றனர்.

4. வைணவர்களால் வைகுண்ட ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது.

5. பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி மார்கழி மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது.

6. முருகப் பெருமானுக்கு படி உற்சவம் நடத்தப்படுகிறது.

7. 63 நாயன்மார்களில் வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை மார்கழி மாதத்தில் தான் நடைபெறுகிறது.

மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மேலும் மார்கழியில் பஜனை பாடுவது என்பது மிகவும் விசேஷமாகும். இதற்குப் பின்னாலும் கூட ஒரு மிகபெரிய காரணம் உண்டு. மார்கழி மாதம் என்பது தேவ லோகத்தில் அதிகாலை பொழுதாகும். இது இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன் கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் ஆகும். அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீங்கி குடும்பத்தில் செல்வம் பொங்கும் என்பது ஐதீகம். அதனால் தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. இது இன்றளவும் கூட கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மார்கழி மாத விரதங்களில் ஏதேனும் ஒன்றை முழுமையாகக் கடைபிடித்தால் கூட பின்வரும் நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதன் படி, மார்கழி மாத விரதம் இருப்பவர்களுக்கு,

1. நல்ல தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

2. தவறுகளை மன்னிக்கும் குணம் மேலோங்கும்.

3. மனம் நல்ல விதத்தில் செயல்படும். இதனால் தெளிவான, தீர்கமான முடிவுகள் எடுக்க முடியும்.

4. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

5. ஆயுள் அதிகரிக்கும்.

6. இறை அருளால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.

இப்படியாக இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் நாமும் கூட நமது இஷ்ட தெய்வத்தை தினமும் தொழுவோம். சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.