Home Tags மீன ராசி பலன்கள்

Tag: மீன ராசி பலன்கள்

மீன ராசி பொது பலன்கள் – மீன ராசி குணங்கள்

மீன ராசியின் குணங்கள்

மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கியுள்ளன. இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். இவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள். இவர்களிடம் பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சமயம் பார்த்து காலை வாரிவிடுவார்கள்.

மீனா ராசி குணநலன்கள்

மீனராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள். இவர்கள் தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக இருப்பார்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். தன்னிடமுள்ள எந்த ரகசியத்தையும் மறைக்கத் தெரியாது. சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் கொண்டவர்கள். துர்ப்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகிவிடுவார்கள்.

மீன ராசிக்காரர்களிடம் குறும்புத்தனம் அதிகம் இருக்கும். சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். இவர்கள் இதமாகவும், இங்கிதமாகவும் சூழ்நிலைக்கு தகுந்தவாறும் அறிந்து பேசுவார்கள். மீன ராசியில் பிறந்தவர்கள் எதையும் திட்டமிட்டுச் செயல்படுவார்கள். இவர்கள் சற்று பயந்த சுபாவம் கொண்டவர்கள். இவர்களை நம்பி எந்த காரியத்திலுமே இறங்க முடியாது. எவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரிடம் அன்பாகப் பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும் செய்வார்கள்.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வெளியில் இருந்து யாரும் தீங்கு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும், அவர்களுக்கு அவர்களே தீங்கைச் செய்து கொள்வார்கள். அதுவே உண்மையும் கூட. தேவையில்லாத விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டு வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இதனால் இவர்கள் வசிக்கும் இருப்பிடத்தைக் கூட அடிக்கடி மாற்றிவிடுவார்கள். தங்களுடைய தேவைகள் பூர்த்தியடைய காலம் நேரம் பார்க்காமல் பிறரின் உதவியை நாடுவார்கள்.

தனகாரகனான குருவின் ராசியில் இவர்கள் பிறந்திருப்பதால், பணத்தைவிட மனம்தான் பெரிது என்பார்கள். யாராவது இவர்களை அவமானப்படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இவர்களின் மதிப்பு, மரியாதை எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள். வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியான செவ்வாயே இவர்களின் 9-ம் அதிபதியாகவும் வருகிறார். 9-ம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்பார்கள். எனவே வாக்கினால், அதாவது பேசி பேசியே நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.

மண வாழ்க்கையைப் பொறுத்தவரையில், மீன ராசியில் பிறந்தவர்கள் சுகபோகமான வாழ்க்கையையே விரும்புவார்கள். இவர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் மணவாழ்க்கையும் அமையும். இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் சற்று தாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணமும் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத் துணையின் உற்றார் உறவினர்களால் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் சொத்துக்கள் வந்து சேரும்.

இவர்களின் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கைத் தரம் முன்னற்றமடையும். இவர்களில் பலர் நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்வார்கள். 8-க்கு உரியவன் சுக்கிரன் என்பதால், திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். ஆயுள்காரனாகிய சனி துலாம் ராசியில் உச்சம் அடைந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.

கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் இருக்காது. வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து மனதில் நிம்மதி மற்றும் அமைதி குறையும். இவர்களுக்கு தெய்வ பக்தியும், பெரியவர்களிடம் மரியாதையுடன் பழகும் குணமும் இருப்பதால் ஆன்மீக, தெய்வீக காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியின் மூலம் செல்வத்தை சேர்ப்பார்கள். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் பூமி, வீடு, மனை, வண்டி, வாகனங்களை அமைத்துக் கொள்வார்கள். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுத்து விடுவார்கள்.

இவர்களின் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு அதிபதியாக செவ்வாய் பகவான் வருவதால், தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறப் பார்ப்பார்கள். தந்தையின் வழியை பின்பற்றினாலும் புதிதாகவும், வித்தியாசமாகவும் முயற்சி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். 10-ம் இடமான ஜீவன ஸ்தானத்துக்கும் இவர்களின் ராசி அதிபதியான குருவே இருப்பதால், இவர்களில் பலருக்கும் சுயதொழிலில் ஈடுபடவே விரும்புவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் அதிகமாக இருக்கும்.

மேலும், மீனராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்த பிள்ளையாகவே இருப்பார்கள். சிறு வயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் பண வரவில் தட்டுப்பாடு இருக்காது. பண வரவுகள் இருந்து கொண்டே இருக்கும். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள்.

மீன ராசிகாரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையும் மீனம் குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். கடல், ஆறு, நதி என்று எல்லாவற்றுக்கும் அடிப்படை நீர்தான். பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோவில்களுக்கு செல்லும் போது இவர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். அப்படி நீரின் தத்துவத்தை உணர்த்தும் ஒரு ஆலயம், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகும்.

இந்த ஆலயத்தின் கருவறையிலேயே நீர் ஏறும் மற்றும் இறங்கும். இந்தத் தல அம்பாள் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள். மீன ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்கி வாருங்கள், கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.