Home Tags Thulam rasi character

Tag: thulam rasi character

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2, 3 ஆம் பாதங்களும் அடங்கியுள்ளன. துலாம் ராசி கால புருஷனின் அங்க அமைப்பில் அடி வயிற்று பாகத்தை குறிக்கும் மூன்றாவது சரராசியாகும். இது ஒரு சுப ராசியாகும். துலா ராசி பகலில் வலுப்பெற்றதாக இருக்கும்.

துலாம் ராசி பலன்கள்

அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதியான சுக்கிரன் இவர்களின் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் இவர்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அழகுடையவர்கள். மேலும் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதிலும் தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதிலும் அலாதி பிரியம் கொண்டவர்கள் துலாம் ராசியினர். மூக்கு தண்டு உயர்ந்தும், மூக்கு துவாரங்கள் அகன்றும் இருக்கும். சிரித்தால் இருபுறங்களிலும் அழகாக குழி விழும்.

நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவார்கள். இந்த இடத்தில் சூரியன் நீச்சம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் எவ்வளவு திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை இவர்கள் அவ்வளவு திறமை இருக்காது, மொத்தத்தில் வீட்டு நிர்வாகத்தை பொறுத்தவரை இவர்கள் பூஜ்யம்தான். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவார்கள். இவர்களுக்கு சிறுவயதில் சிறு சிறு கண்டங்கள் ஏற்பட்டாலும் நீண்ட ஆயுள் கொண்டவர்கள். மூக்கும் முழியுமாக அழகாக தோற்றமளிப்பார்கள். உதடுகள் அழகாக அமைந்திருக்கும்.

துலாம் ராசியில் பிறந்தவர்கள் நேர்மையாக இருக்கவே விரும்புவார்கள். இவர்களை போலவே மற்றவர்களும் நீதி, நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள். தராசு எவ்வளவு சிறயதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போலத்தான் மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருப்பார்கள். வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள்.

துலாம் ராசிக்கு 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுவார்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பார்கள். குடும்ப பொறுப்புகளை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவார்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால் திருடனுக்கும் அறிவுரை கூறுவார்கள்; பண்டிதர்களுக்கும் ஆலோசனை கூறுவார்கள். பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் இவர்கள் சமர்த்தியசாலிகள்.

பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். வாக்கு சாதுர்யம் கொண்ட இவர்களிடம் பேசி ஜெயிப்பதென்பது முடியாத காரியம். வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் சரளமாக பேசும் இவர்கள் வீட்டில் ஒன்றுமே தெரியாதவர் போல இருப்பார்கள். எதற்கும் சளைக்காமல் பாடுபடுபவர்கள் என்பதால் தோல்விகளை கண்டு எளிதில் துவண்டு விட மாட்டார்கள்.

துலாம் ராசிக்கு 6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், இவர்களுக்கு எதிரிகள் வெளியில் இல்லை. இவர்களுக்கு இவர்களேதான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் மனபக்குவம் இருக்கும். யாரையும் சார்ந்து இயங்கக்கூடது என்கிற வைராக்கியம் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், துலா ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடன் தான் இருக்கும். கையில் பணம் வருவதற்கு முன்பே செலவுகள் வாசல் கதவில் வரிசையில் நிற்கும். குடும்பப் பொறுப்புகளும் அதிகமாக இருப்பதால் சேமிக்க முடியாமல் போகும். ஆனாலும், இவர்களின் தேவைக்கேற்ற பணம் ஏதானும் ஒரு வழியில் வந்து கொண்டுதான் இருக்கும். சிறு வயதில் கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் பின்னர் தன்னுடைய வசதிக்காகவும், குடும்பத்தினருக்காகவும் வீடு, மனை, வண்டி வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

நடுத்தர வயது வரை இவர்களது வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்தால் மற்றவர்களுக்காக கடன் வாங்குவதையும் அதற்காக வட்டி கட்டுவதையும் தவிர்க்கலாம். துலாம் ராசிக்கு 10-ம் இடத்துக்கு உரியவராக சந்திரன் இருக்கிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வார்கள். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்கள் பொது நல சேவைகளுக்காக நிறைய செலவுகளை செய்வார்கள். அடிக்கடி வெளியூர் பயணங்கள், தெய்வீக யாத்திரைகள் செய்யும் வாய்ப்புகள் அமையும். இதனால் பயண செலவுகளும் அதிகரிக்கும். தனது சந்ததிகளுக்கு சொத்துக்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதன்படியே சேர்த்தும் கொடுப்பார்கள். ஆனால், வெளியில் அதனை காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

துலாம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை சேர்ப்பதை இவர்கள் விரும்புவார்கள். ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்போர், அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். அதற்காக இவர்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது திண்ணம்.