கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்
கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு கல்லாதது உலகளவு என்ற தெளிவு உடையவர். கடவுளை மட்டுமே பெரிதென மதிப்பர். இவர்கள் எதையும் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பவர்கள். கொள்கையை விட்டுக் காரியத்தை சாதிக்க மாட்டார்கள்.
கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் அனுபவங்களைக் அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை சிறந்த முறையில் வகுத்துக் கொள்ளும் திறமை உடையவர்கள். அறிவில் சிறந்த இவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். இரக்க குணமுடைய இவர்கள் கண்ணியமானவர்கள். இவர்கள் யாரிடமும் அதிகம் பழக மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டம் மிக குறைவு. ஆனால் இவர்கள் எதிரிகளைத் தன் வசமாக்கிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள்.
இவர்கள் ஒரு செயலில் இறங்கி விட்டால் அந்த செயலை எப்பாடுபட்டாவது சிறப்பாக செய்து முடித்தே தீருவார்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே பல வேதனைகள் மற்றும் சோதனைகளை சந்திப்பார்கள். அதனால் இம்மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே முதிர்ந்த அனுபவத்தை பெற்றிருப்பார்கள். கடவுளின்மீது அதிக பற்று கொண்டிருப்பார்கள். சகிப்புத் தன்மை அதிகம் கொண்ட இவர்கள் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை விரைவாக எட்டுவார்கள்.
இம்மாதத்தில் பிறந்தவர்கள், எந்த ஒரு காரியத்தையும் சாமர்த்தியமாக எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் சரி, தன்னுடைய குறிக்கோளை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் மற்றவர்களிடத்தில் உள்ள குறைகளையும், குற்றங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கூறிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.
கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள், தன்னை பற்றிப் புறம் பேசுபவர்களையும், தனக்கு தீங்கு விளைவிக்க முயன்றவர்களையும் தகுந்த நேரம் பார்த்து பழிக்குப் பழி வாங்கும் குணத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் இம்மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் போக்குவதில் சுயநலமாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். இவர்கள் ஒரு குழந்தையை போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இம்மாதத்தில் பிறந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையுடனும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள். மேலும் தானம், தர்மம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் சகல பாக்கியங்களையும் வாழ்க்கையில் பெறுவர்.