எலும்பு தேய்மானம்
எலும்புகள் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எலும்புகள் நல்ல வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனிதர்களுக்கு வயது மூப்பு ஏற்படும்போது உடலில் எப்படி தளர்வுகள் இயல்பாக ஏற்படுமோ அதுபோல, எலும்புத் தேய்மானமாகி மூட்டு வலி, எலும்புகள் உடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இன்றைய உணவுப் பழக்கத்தால் எலும்புத் தேய்மானம் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகிவிட்டது. ஒருவருக்கு எலும்பு தேய்மானம் ஏற்பட்டால், முழங்கால், இடுப்பு, கழுத்து, தோள், மணிக்கட்டு, முதுகு போன்ற பாகங்களில் கூட வலி ஏற்படலாம்.
எலும்புகள் தேய்மானம் அடைய காரணம் உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லாதது தான். குறிப்பாக ஒருவருக்கு கால்சியம் சத்துக்கள் குறைவாக இருந்தால் இளம் வயதிலேயே எலும்புகள் தேய்மானம் அடைய வாய்ப்புகள் உள்ளது. எலும்புகள் தேய்மானம் அடைவதை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதின் மூலம் சரி செய்ய முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
வைட்டமின் ‘டி’
சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி சத்து உடலுக்கு அதிக அளவில் கிடைக்கிறது. ஆகவே வாரத்தில் 3 நாட்களாவது தவறாமல் குறைந்தது பத்து நிமிடங்கள் வெயிலில் இருப்பது அவசியம் ஆகிறது. வைட்டமின் ‘டி’ சத்தானது, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தை உணவிலிருந்து பிரித்து அனுப்புகிறது. இந்தச் சத்தை, சூரிய ஒளி தவிர காளான், முட்டையின் மஞ்சள் கரு, மீன், சோயா பால் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலமாகப் பெறலாம். மீன்களில் மத்தி மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்து உள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது எலும்புகளுக்கு நல்ல உறுதியைத் தரும்.
கால்சியம்
எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கால்சியம் சத்து முதலிடத்தை பிடிக்கிறது. எனவே, கால்சியம் சத்து நிறைந்த உணவுகளான பால், முட்டை, ஓட்ஸ், சோயா, பிராக்கோலி, பச்சைக் காய்கறிகள், பாதாம் போன்ற உணவுப்பொருள்களை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
வைட்டமின் கே
எலும்புகளுக்கு உறுதி அளிப்பதில் இன்றி அமையாத இன்னொரு சத்து வைட்டமின் கே. இது நீரில் கரையைக் கூடிய ஊட்டச்சத்தாகும். இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக தேய்ந்த, பாதிக்கப்பட்ட, உடைந்த எலும்புகளை சரி செய்ய வைட்டமின் கே உதவுகிறது. வைட்டமின் கே-வைப் பெற கோஸ், காலிப்ளவர், துளசி, கொத்தமல்லி, முளைக்கட்டிய பயிறு வகைகள், கருப்பு நிற திராட்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
மெக்னீசியம்
மெக்னீசியக் குறைபாடு பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படலாம். இந்த சத்தானது எலும்புகளின் உறுதித் தன்மையையும் அதன் அமைப்பையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே மெக்னீசியம் நிறைந்த பச்சைக் காய்கறிகள், பூசணி விதை, பயிறு வகைகள், வாழைப்பழம், பாதாம் போன்ற உணவுகளை சாப்பிடுவது நன்மையைச் செய்யும்.
பாஸ்பரஸ்
எலும்புகளுக்கு கால்சியம் சத்தை அதிகரிக்க பாஸ்பரஸ் சத்தும் உதவுகிறது. பெரும்பாலான உணவுகளில் பாஸ்பரஸ் சத்து நிறைந்து காணப்படுகிறது. சாப்பிடாமல் இருப்பது, மதுபானம் அருந்துவது போன்ற சில காரணங்களால் உடலில் உள்ள பாஸ்பரஸ் அளவு குறைகிறது. இதனைத் தவிர்க்க சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்களில் இருந்து விடுபடுவது நல்லது. இறைச்சி, மீன், பால் உணவுகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலமாக உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகளவில் கிடைக்கப்பெறும்.
வைட்டமின் சி
நமது எலும்புகளை கொலாஜின் அடுக்குகள் பாதுகாத்து வருகிறது. கொலாஜின் என்பது இணைப்பு திசுக்களில் உள்ள அடிப்படை புரதமாகும். இது உடலில் உள்ள புரத சத்தில் 25 முதல் 35 சதவீதம் வரை உள்ளது. வைட்டமின் சி எலும்புகளைப் பாதுகாக்க உதவும் கொலாஜின் அடுக்களின் உற்பத்தியை அதிக அளவில் ஊக்குவிக்கும். இந்த வைட்டமின் சி நமது உடலுக்கு கிடைக்க, சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, தாக்காளி, பப்பாளி, கொய்யா, அன்னாசி போன்ற உணவுகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
புரதச்சத்து
எலும்புகளை பாதுகாக்க இன்னொரு அவசியமான சத்து புரதச் சத்தாகும். இது, எலும்புகள் தேய்ந்து நலிந்து போவதைத் தடுக்கிறது. மேலும் உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும். எனவே தயிர், பால், முட்டை, ஓட்ஸ், சீஸ், இறைச்சி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, சோயா போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.