சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி சாப்பிட வேண்டும்?
அன்றாட பழக்கவழக்கங்களில் நம் முன்னோர்கள் பல சாஸ்திரங்கள் கூறியிருப்பதை இன்றும் நாம் கடைபிடித்து வருகிறோம். நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு. அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நாம் சாப்பிடும் உணவு அவசியமானது.
ஒருவேளை உணவு சாப்பிடுபவர்கள் யோகிகள். இருவேளை உணவு உண்பவன் போகி (அனுபவிக்கப் பிறந்தவன்). மூன்றுவேளை உணவு உண்பவன் ரோகி (நோயாளி) என சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவர் இரண்டு வேலைகள் மட்டுமே சாப்பிடவேண்டும் என்றும் அதிலும் பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். இவ்வாறு சாப்பிடுவது ஆரோக்கியமான உணவு முறை என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.
சாப்பாடு சாப்பிடுவதில் பல முறைகள் உள்ளன.அதே போல் எப்படி எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். எனவே உணவை சாஸ்திரங்களின் படி எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.
திசைகளும் பலன்களும்
கிழக்கு திசை
கிழக்கு திசை இந்திரனுக்கு உரிய திசையாகும். எனவே கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது ஆயுள் நீடிக்கும். அதுமட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். கல்வி மேம்படும்.
மேற்கு திசை
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு உரிய மேற்கு திசை. எனவே மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். பொருள் சேரும். நாம் செய்யும் தொழிலில் உயர்வு உண்டாகும். இது தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையலாம்.
தெற்கு திசை
எமனுக்கு உரிய திசை தெற்கு திசை. இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் புகழ் சேரும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்கள், கலைஞர்கள், நல்ல அறச் செயல்களுக்காக பாடுபடுபவர்கள், தெற்கு திசையை நோக்கி சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு நல்ல பெயரும், புகழும் கிடைக்கும்.
வடக்கு திசை
வடக்கு திசை சிவனுக்கு உரிய திசையாகும். இத்திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை, முடிந்த வரை தவிர்க்க வேண்டும். இந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடும் போது, நோய் வருவதற்கும், நோய் வளருவதற்கும் வாய்ப்புள்ளதாக, நம் முன்னோர்கள் கூறி உள்ளனர்.
ஒருவர் தங்களின் வீட்டைத் தவிர்த்து உறவினர்களின் வீட்டிற்கு சென்றால் அங்கே மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது. ஏனெனில் அவர்களின் உறவுகளில் விரிசல்கள் ஏற்படும்.