சித்தர்களின் சமாதி நிலை
பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. சாதாரண மனித மரணத்தில் உடலின் கழிவுகளான மலம், சிறுநீர், விந்து நாதம் போன்றவை வெளிப்பட்டு மரணம் சம்பவிக்கும். ஆனால், சித்தர்களின் சமாதி நிலையில் இவ்வகை கழிவுகள் வெளிவராமல் உயிர் சக்தியாகிய விந்துவானது உச்சந்தலையில் அடங்கி ஒடுங்கி விடும்.
யோகிகளுடைய உடல் இயக்கமும், மன இயக்கமும் நிறுத்தப்பட்டு விடும். அந்த உடல் மற்ற, உடல்களை போல மண்ணில் அழியாது. காலா, காலத்துக்கும் காக்கப்படும். இந்த சமாதி நிலைகள் பலவகைப்படும். அவை காய கல்ப சமாதி நிலை, ஒளி சமாதி நிலை, நிர்விகற்ப சமாதி நிலை, விகற்ப சமாதி நிலை, சஞ்சீவனி சமாதி நிலை என மேலும் பல உண்டு. இது பெரிய சமுத்திரத்தை சிறு பாத்திரத்தில் அடைப்பது போல சொல்லிகொண்டே போகலாம். மேற்கண்ட இந்த சில சமாதி நிலைகளை, எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சற்று விரிவாக பார்ப்போம்.
காய கல்ப சமாதி நிலை
உயிர் துறத்தலுக்கு பிறகு உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும் சமாதி நிலை இது. இந்த சமாதி நிலையில் மறு பிறப்புக்கு வழி உண்டு என நம்பப்படுகிறது. ஜீவசமாதி அடைந்த யோகி நினைத்தால் மீண்டும் அந்த உடலுக்குள் வரமுடியும். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக கொடிவிலார் பட்டி, தேனீ மாவட்டத்தில் உள்ள சச்சிதானந்தர் சுவாமிகளின் சமாதியை கூறலாம்.
ஒளி சமாதி நிலை
ஒரு யோகி, உடலை ஒளி தேகமாக்கி, உடலின் சூட்டினை அதிகரித்து இந்தப் உடலை பூமிக்குக் கொடுக்காமல் ஒளியாக்கி மறைந்து விடுதலே, ஒளி சமாதி ஆகும். இதற்கு உதாரணமாக, வடலூர் வள்ளலார், திருவண்ணாமலையில் இருந்த விட்டோபா ஸ்வாமிகள், எடப் பள்ளி சத்குருனாதர், விருத்தாசலம் குமாரதேவர் ஆகிய யோகிகளை கூறலாம்.
நிர்விகற்ப சமாதி
பிரம்மத்தில் லயம் பெற்று, மறுபிறவி அற்ற நிலையை அடைவது. இதற்கு உதாரணம் மகாமுனிவர் போகர்.
விகற்ப சமாதி
மனதில் இருமை நிலையோடு கூடிய சமாதி நிலை. இதில் மறுபிறப்புக்கு வழி உண்டு.
சஞ்சீவனி சமாதி
உடலுக்கு சஞ்சீவித் தன்மையை மண்ணிலும், மனதின் சந்ஜீவித் தன்மையை விண்ணிலும் கொடுக்கும் நிலை. இது ஒரு மறுபிறப்பு இல்லாத நிலை. இதற்கு உதாரணமாக சந்த ஞானேஸ்வர் சமாதி யை கூறலாம், இது ஆலந்தியில் உள்ளது.
இன்னும் எண்ணற்ற சமாதி நிலைகள் உள்ளது. அவற்றை பற்றி எழுத இந்த ஒரு கட்டுரை போதாது.