கும்ப ராசி குணங்கள்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சதயம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2, 3 ஆம் பாதங்களும் அடங்கியுள்ளன. கும்ப ராசியானது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் ஸ்திர ராசி இதுவாகும். கும்ப ராசி வாயு தத்துவத்தைக் கொண்ட ஒரு ஆண் ராசியாகும்.
கும்ப ராசி ஒரு குடம் போன்ற அமைப்பை கொண்டது. குடத்தைத் திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். அதே போலதான் இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பார்கள். தொடர்ந்து பத்து நிமிஷம் பேசிய பிறகுதான், இவர்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியமுடியும். இவர்களிடம் பல திறமைகள் இருந்தாலும், அதனை சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, இவர்களின் திறமைகளை வெளிப் படுத்த முடியும்.
கும்ப ராசியில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டு இருப்பார்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்தும், நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு அகன்றும் இருக்கும். ஒரு வித புண் சிரிப்போடு சரளமாகப் பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியேற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும். இவர்களின் உடை, உண்ணும் உணவுகள் எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள்.
ஒரு காரியத்தை இவர்களிடம் ஒப்படைத்தால் அது முடிந்து விடும் என நினைத்து கொள்ளலாம். கண்ணும் கருத்துமாக இருந்து அந்த வேலையை செய்து முடிப்பார்கள். யாருடைய அந்தரங்க பிரச்சனையிலும் தேவையின்றி மூக்கை நுழைக்க மாட்டார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தின் மீது அதிக பற்றுதல் இருக்கும். தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் மேல் அதிக பாசம் கொண்டவர்கள்.
இவர்கள் அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டவர்கள். நியாய அநியாயங்களை யாருக்கும் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாதவர்கள் நியாவாதிகள். எனினும் அதிகம் பிடிவாதம் கொண்டவர்கள். இவர்கள் மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்குப் பிடித்தவர்களிடம் நெருங்கிப் பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து தூக்கி எறிவார்கள்.
கும்ப ராசிக்காரகள் உண்மை பேசுவதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். தவறு செய்பவர்களை கண்டால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் வல்லவர்கள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிப்பார்கள். மற்றவர்களை எளிதில் திருத்தக் கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்கள். பிறர் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் தேவையின்றி தலையிட மாட்டார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பார்கள்.
இவர்களுடைய பிள்ளைகளால் இவர்களுக்கு அந்தஸ்து உயரும். இவர்களின் ராசிக்கு 5-ம் இடத்துக்கு உரிய புதனே 8-ம் இடமான கன்னிக்கும் அதிபதி என்பதால், இவர்களுக்கும் இவர்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு.
ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும். இவர்களின் 11-ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதி என்பதால், அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வார்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் அதிக லாபம் பெறுவார்கள்.
கும்ப ராசியில் பிறந்தவர்களின், மணவாழ்க்கையைப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் பல நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும். என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற சண்டைகளும் உண்டாகி கொண்டே இருக்கும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தின் மீது அதிக பற்று இருக்காது. ஆனால் சமுதாயத்தைப் பெறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள்.
இவர்களுக்கு பண வரவுகள் போதுமென்ற அளவிற்கு தாராளமாகக் கிடைக்கும். பணப் பற்றாக்குறை பெரிய அளவில் ஏற்படாது என்றாலும் சேமிக்கும் அளவிற்கு இருக்காது. பெரும்பாலும், வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் பணத்தை சேர்த்திடுவார்கள். இளம் வயதில் கஷ்டங்களை அனுபவித்தாலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு தேவையான வீடு, மனை வசதிகளையும், நவீன வண்டி, வாகனங்களையும் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றைப் பற்றி பெரிய அளவில் காட்டிக் கொள்ளாமல் வாழ்வார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் எல்லா சக்திகளும் நிறைந்த ஆலயத்துக்குச் செல்லும்போது, பல பெரிய மாற்றங்கள் இவர்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஓர் ஆலயமே கும்பகோணத்தில் அமைந்துள்ள கும்பேஸ்வரர் ஆலயம் ஆகும்.
பாற்கடலை கடையும்போது வெளிப்பட்ட அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமகக் குளத்தில் அமுதமாகக் கொட்டியது. ஈசன் அத்தலத் திருமண்ணில் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவம் செய்தார். அந்த ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவமாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரர் ஆனது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், இன்னும் பல்வேறு திருநாமங்களோடும் பல யுகாந்திரங்களுக்கு முன்பு தோன்றிய கும்பேசுவரர் இன்றைக்கும் பேரருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் சர்வ மங்களங்களையும் அருளும் மங்களாம்பிகை ஆகும். இக்கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வந்தால் கும்ப ராசிகார்கள் மனதில் இருக்கும் மலை போன்ற கவலைகள் பனி போல விலகி ஓடும்.
கும்ப ராசியில் பிறந்த ஆண் குழந்தைக்கு வைக்கவேண்டிய பெயர்கள் பட்டியல்