பாம்பு கடிக்கான முதலுதவி
அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் காடுகளை அழித்து வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகிறோம். காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள விலங்குகள், பூச்சிகள், விஷஜந்துகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து மக்களின் வீடுகளை நோக்கி படை எடுக்கின்றன.
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் பாம்புகளும் நகரங்களில் குடிபெயர்ந்து வருகிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் அதன் ஆளைக் கொல்லும் விஷம்தான். அப்படிப்பட்ட பாம்பு மனிதனை தீண்டினால் என்னென்ன முதலுதவிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.
மனிதனை பாம்பு கடித்துவிட்டால் அது விஷ பாம்பா, அல்லது சாதாரண பாம்பா என அறிந்து கொள்ள வேண்டும். சாதாரண பாம்பு எனில் சில முதலுதவி சிகிச்சைகள் எடுத்து கொண்டாலே போதுமானது. அதுவே விஷ பாம்பு தாமதிக்காமல் சரியான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தவறினால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
பாம்புக் கடியை எப்படி அடையாளம் காண்பது
பாம்பு கடித்த இடத்தில் இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா? கடித்த இடம் சற்று வீங்கி இருக்கிறதா? கடுமையான வலி இருக்கிறதா? மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் அது விஷப்பாம்பு கடித்ததாகத் தான் இருக்கும்.
பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்
1. பாம்பு கடித்த இடத்தில் இறுக்கி கட்டுப் போட கூடாது. இறுக்கி கட்டுப் போட்டால், இறுக்கம் காரணமாக பாம்பின் விஷம் ஓரிடத்திலேயே தங்கிவிடும். இதனால் பாம்பு கடித்த பகுதி அழுகிப் போக வாய்புகள் உண்டு. அதனால் எப்போதும் லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2. பாம்பு கடித்த இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவ வேண்டும். அந்த சமயத்தில் பாம்பால் கடிபட்டவர் பதற்றம் அடையக் கூடாது. அவர் பதற்றமடைந்தால் உடலின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் விஷம் வேகமாக ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவும். அதனால் அந்நபருக்கு தகுந்த ஆறுதல் கூறி மன தைரியத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்கக் கூடாது. ஏனெனில் வேகமாக நடக்கும் போது ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.
4. பாம்பு கடித்த இடத்தை, இதயத்தை விடத் தாழ்வாக வைக்க வேண்டும். பாம்புக் கடிக்கு ஆளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும்.
5. தேள், பூரான், மற்றும் பல விஷஜந்துக்கள் மூலம் விஷக்கடி ஏற்பட்டவர்களுக்கு முதலில் கடிபட்ட இடத்தை நன்கு கழுவி, கொட்டுப்பட்ட இடத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது தான் சிறந்த முதல் உதவி.
பாம்பு கடிக்கு செய்யக்கூடாதவை
1. படங்களில் காட்டபடுவதை போல பாம்பு கடித்த இடத்தை வாய் வைத்து விஷத்தை உறிஞ்ச கூடாது.
2. பாம்பு கடித்த இடத்தை கத்தியை வைத்து கீற கூடாது.
3. பாம்பு கடித்தவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஒரு சிலர் மந்திரவாதிகளிடம் அழைத்து செல்வர். அவ்வாறு செய்ய கூடாது.