முதலுதவி என்றால் என்ன
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும். இது மருத்துவத்துறையில் சிறப்புபெற்ற நபர் மூலம் அளிக்கப்படும்.
ஒரு சில சாதாரண நோய்கள் மற்றும் சிறு காயங்களுக்கு முதலுதவி மட்டுமே போதுமானது. முதலுதவி என்பது சில சமயங்களில் உயிரை காப்பாற்றுகிற திறன்களை உள்ளடக்கியது. இவைகளை ஒருவர் குறைந்த அளவிலான உபகரணங்களைக் கொண்டு செயல்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
முதலுதவி அனைத்து மனிதர்களுக்கும், மற்றும் விலங்குகளுக்கும் கொடுக்கப்படலாம் என்றாலும், பொதுவாக முதலுதவி மனிதர்களுக்கு தரும் கவனிப்பையே குறிக்கிறது.
முதலுதவியின் வரலாறு
முதலுதவி செய்யும் பழக்கம் முதன்முதலில் பதினோராம் நூற்றாண்டில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் பழக்கம் நடுவில் வெகுவாக கைவிடப்பட்டது. அதன் பிறகு 1859 இல் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட் என்பவர், சல்பிரினோ என்னும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார். அவர்களும் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தனர். நான்கு வருடங்களுக்கு பின்பு, நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து, போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கினார்கள். அதுதான் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது.
அதன் பிறகு புனித ஜான் அவசர ஊர்தி ஒன்று 1877 இல் தொடங்கப்பட்டது. அது முதலுதவியை பற்றி சொல்லி கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. மேலும் அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878 இல் முதன் முதலில் வழக்கத்தில் வந்தது.
பல தொடர்வண்டி நிலையங்களிலும், சுரங்கங்களிலும் அவசர ஊர்தி சேவைகளானது முதல் சிகிச்சை (first aid treatment) என்ற பெயரிலும் தேசிய சேவை (national aid) என்ற பெயரிலும் செய்யப்பட்டன. 1878 இல் அறுவை சிகிச்சை நிபுணர் ‘பீட்டர் ஷெபர்ட்’ என்பவர் பொதுமக்களுக்கு முதல் உதவி சிகிச்சைகள் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் டாக்டர் கோல்மன் என்பவருடன் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு வுல்விச் என்னும் இடத்திலுள்ள பிரஸ்பைடிரியன் பள்ளியில் பாடங்கள் நடத்தினார். ஷெபர்ட் தான் முதன் முதலில் காயப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் முறைக்கு முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இச்செயல்களுக்குப் பிறகு முதலுதவியின் பயிற்சி வகுப்புகள் வெகுவாக ஆங்காங்கே நடத்தப்பட்டது.
இவ்வாறு முதலுதவி இயக்கங்கள் உலகமெங்கும் தொடங்கபெற்று இன்று பல கோடி பேரை ஒவ்வொரு ஆண்டும் காப்பாற்றி வருகின்றன.