சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி
சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும் புரிவதில்லை. விபத்து ஏற்பட்டவருக்கு ஒரு சில முதலுதவிகள் செய்வதன் மூலம் விபத்தில் அடிபட்டவரை நம்மால் காப்பாற்ற முடியும். அவை எவையென்பதை பின்வருமாறு பார்ப்போம்.
வாகனத்தின் இன்ஜினை அணைக்கவும்
விபத்து ஏற்பட்டு வாகனம் ஓடிக்கொண்டு இருந்தால், இன்ஜினை நிறுத்த முயற்சி செய்யவும். முடிந்தால் வாகனத்தின் பேட்டரிகளின் இணைப்புகளைத் துண்டிக்கவும். பெட்ரோல் – டீசல் செல்லும் வழியை அடைக்கவேண்டும். ஒருவேளை வாகனத்துக்கு அடியில் மனிதர்கள் சிக்கியிருந்தால் சக்கரங்களின் அடியில் கட்டைகளை வைத்து, வாகனத்தை நகராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனம் கிழே விழுந்தால் பெட்ரோல் கசியும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை பெட்ரோல் அல்லது டீசல் கசிந்து இருந்தால் தீப்பிடிக்கும் வாய்புகள் அதிகம். இதனால் வாகனத்தின் எரிபொருள் டாங்க் வெடிக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் சுற்றியிருப்பவர்கள் யாரும் எளிதில் தீ பற்றகூடிய பொருட்களை அருகில் எடுத்துச் செல்ல கூடாது.
எலும்புகள் சேதமடைவதை தடுக்க வேண்டும்
விபத்தில் அடிபட்டவருக்கு முதுகெலும்பு, கழுத்தெலும்பு போன்றவை சேதமடையலாம். அந்த சமயங்களில் பாதிக்கப்பட்டவரை அசைத்து வளைத்து தூக்கினால், எலும்புகள் மேலும் சேதமடைந்து கடுமையான பாதிப்புகள் அடிபட்டவருக்கு ஏற்படலாம். அதனால், அடிபட்டவரை நான்கு பேர் சேர்ந்து தூக்க வேண்டும்.
துணியில் படுக்க வைக்க வேண்டும்
பாதிக்கபட்டவரின் தலை, தோள்பட்டை மற்றும் மார்புக்கு அடியில், இடுப்புக்கு அடியில், தொடைக்கு அடியில் ஒரு கையையும், கெண்டைக்காலுக்கு அடியில் ஒரு கையையும் கொடுத்து, நால்வரும் ஒரே சமயத்தில் தூக்கி ஒரு சுத்தமான துணியில் படுக்க வைக்க வேண்டும்.
மருத்துவமனைக்கு விரைய வேண்டும்
பின் அந்த ஜமுக்காளத்தை உடலின் மீது போர்த்தியது மாதிரி சுற்றி, துணி நழுவாமல் இருக்க ஆங்காங்கே சிறு கட்டுகள் போட வேண்டும். பின் பாதிக்கப்பட்டவரின் இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் ஒருவரும் வந்து தலையையும் கழுத்தையும் தாங்கிப்பிடித்து, அசையாமல் நேராகத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும்.
மேற்கண்டவை தவிர, உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவ ஊர்தி (Ambulance), மீட்புப் பணி, (தீ விபத்து ஏற்பட்டு இருந்தால்) தீயணைப்பு படை போன்றவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
எலும்பு முறிவுகளும் அதற்கான முதல் உதவி சிகிச்சைகளும்
ஒரு நபர் விபத்தில் சிக்கி எலும்பு முறிந்து விட்டது என்றால், அவருக்கு என்னென்ன முதல் உதவிகள் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
முதலில் விபத்தில் சிக்கிக் கொண்ட அந்த குறிப்பிட்ட நபருக்கு எலும்புகள் முறிந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு கீழ்காணும் வழிமுறைகள் உதவும்.
1. அடிபட்ட இடத்தில் வலியும், வீக்கமும் இருக்கும். அத்துடன் அடிபட்ட பகுதியை அசைக்க முடியாது. அசைத்தால் வலி அதிகமாகும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியைத் தொட்டாலே வலி உயிர் போகும்.
2. எலும்புகள் ஒருவேளை முறிந்திருந்தால் அப்பகுதியில் உள்ள எலும்புகள் உள்ளுக்குள் உராய்வதை பாதிக்கப்பட்ட நபர் உணர்வார்.
3. மேலும், முறிவு ஏற்பட்ட பகுதியில் வளைவு அல்லது குழி தோன்றலாம் அல்லது முறிவுக்குக் கீழ் உள்ள பகுதி பலமில்லாமலும் இருக்கும்.
எலும்பு முறிவிற்கான பொதுவான முதலுதவிகள்
1. அடிபட்ட நபர் நகராமல் பார்த்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக விபத்துக்கு உள்ளான அடிபட்ட பாகத்தை அசைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. முடிந்தால் மெல்ல அடிபட்டவரை படுக்க வைக்கலாம். அவருக்கு நினைவு இருக்குமாயின் அவரது பதற்றத்தை போக்கலாம். ஒருவேளை காயம் இருந்தால் சுத்தமான ஈரத் துணி அல்லது கை குட்டையால் அடிபட்ட இடத்தை துடைக்கலாம்.
3. ரத்தக்கசிவு இருந்தால் துணியைப் பல மடிப்புகளாக மடித்து, காயத்தின் மீது வைத்து, கட்டுப் போடலாம்.
- பின்பு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம்.