ஆரோக்கியமான நகங்கள்
நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ‘ ஆல்ஃபா கெரட்டின் ‘ என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுக்களை பூசுவதும் என நம் மனநிலைக்கு ஏற்ப பாதிப்படைவது நகங்கள் தான்.
நம் அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சொல்லும் நகத்தைப் பராமரிப்பது எப்படி, எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், எந்த நோயின் அறிகுறி என்பதை பார்க்கலாம்.
நகம் விரலுக்கு ஒரு கவசம் போன்று உள்ளது. நகத்தின் மிகப்பெரிய வேலையே விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். நகத்தில் பல பாகங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் கை மற்றும் கால்விரல் நகங்களுக்குப் பொதுவானவை
மேற்புறத்தில் பளிச்சென்றும் வழுவழுப்பாகவும் இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். நகங்களில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இல்லை.
நகத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாட்டிற்கு காரணம்.
- ஊட்டச்சத்து குறைபாடு
- தொடர்ந்து நோய்வாய்ப்படுதல்
- சில வகையான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல்
- வயது முதிர்ச்சி.
நகங்கள் சொல்லும் நோய் அறிகுறிகள்
- பல நோய்களுக்கு முக்கியமான அறிகுறி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான். உடலில் அதேனும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அது நகத்தில் பிரதிபலிக்கும்.
- கைவிரல் நகங்கள் மிகவும் வெண்மையாகவும், ஸ்பூன் போன்று குழி விழுந்தும் இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு.
- கைவிரல் நகங்கள் வீங்கியிருத்தல். இதை `கிளப்பிங் நெய்ல்ஸ்’ என்பார்கள். இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு, இதய உறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு போன்ற நோய்களின் பிரதான அறிகுறி இது.
- நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் இருந்தால் `சிரோசிஸ்’ (Cirrhosis) என்னும் கல்லீரல் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- சிவப்பு நிற புள்ளிகள் இருந்தால் `சொரியாசிஸ்’ என்னும் சரும நோயின் தாக்கமாக இருக்கும்.
- நகத்தின் மேல் பகுதியின் நிறம் மாறாமல் கீழ்ப்பகுதியில் மாறியிருந்தால், அது சிறுநீரக நோய் பாதிப்பு .
- நகம் நீல நிறமாக இருந்தால், ஒழுங்கற்ற ரத்த ஓட்டம்.
- நகம் மஞ்சள் நிறமாக இருந்தால், மஞ்சள் காமாலை, நுரையீரல் நோய், நிணநீர்த்தேக்க நோய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்.
- நகத்தில் கறுப்புக்கோடுகள் இருந்தால் அது புற்றுநோயின் அறிகுறி.
- கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற வைட்டமின் குறைபாடுகளாலும் நகத்தின் குறுக்கே வெள்ளைக்கோடுகள், வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்.
நகங்கள் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்
- அடிக்கடி விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- நகத்தில் ஈரம் இல்லாமல் துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- நகம் கடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால், நகத்தில் உள்ள கிருமிகள் வாய் வழியாக சென்று நோய் தோற்றை உண்டாக்கி விடும்.
- கெமிக்கல் கலந்த திரவங்களை பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணியவேண்டும்.
- நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
- வறண்ட நகம் கொண்டவர்கள் பாலிஷுக்குப் பதிலாக மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தலாம்.
- பாட்டில் மூடி, டப்பாக்களைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்த வேண்டாம். இதனால் நகங்களில் வலி ஏற்பட்டது நரம்புகள் பாதிப்படையும்.
- நீளமாக நகம் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். இது பல காயங்களுக்கு வழிவகுக்கும்.
- நகவெட்டியைக் கொண்டு நகங்களை வெட்டலாம். பிளேடு, கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றைக் கொண்டு நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
- நகங்களின் நிறத்திலும் வளர்ச்சியிலும் திடீரென மாற்றம் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.