பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா?
நம் முகத்தோற்றத்தை அழகாக காட்டுவதில் பற்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவருக்குமே பற்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அனால் அப்படி இருப்பதில்லை.
பற்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இல்லாவிட்டால் அதனாலேயே பல உடல் நல பாதிப்புகள் ஏற்படும். குழந்தைப் பருவத்தில் இருந்தே பற்களின் பராமரிப்பில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். சரியான பராமரிப்பு இருந்தால் தான் பற்கள் அழகாகவும் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
பற்களை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் பல நோய்களை நெருங்கவிடாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். நமது தலையிலிருக்கும் மூளை, கண், காது, மூக்கு, நாக்கு, ஆகியவற்றுடன் பற்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது.பற்களில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது நம் முகம் தலை என அனைத்தையுமே பாதிப்படைய செய்து விடும்.
பற்கள் இயற்கையாகவே சிலருக்கு அழகாகவும், வெண்மையாகவும், உறுதியாகவும் அமைந்திருக்கும். ஆனால் சிலருக்கு ஒழுங்கற்ற வரிசையில் அமைந்திருக்கும். மஞ்சள் நிறத்திலும் காணப்படும். பற்கள் அழகாக வரிசையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பல் கிளிப்புகள் அணிகின்றனர். துருத்தி நிற்கும் பற்களை பலமாக உள்ளே இழுக்கும் இது போன்ற கிளிப் முறைகளால் முகத்தில் அமைந்துள்ள நரம்புகளிலும் ரத்தக்குழாய்களிலும் அழுத்தம் அதிகமாகி மிகுந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
பற்களை பாதுகாக்கும் முறைகள்
- பற்களை தினமும் காலை , இரவு என இரண்டு வேளையும் துலக்க வேண்டும்.
- எந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பல் இடுக்குகளில் தங்கி இருக்கும் சிறு சிறு உணவு துணுக்குகள் வெளியேற்றப்படும்.
- சாப்பிட்ட பின்னர் பல் இடுக்குகளில் தங்கி இருக்கும் உணவு துகள்களே பாக்டீரியாக்கள் பெருக காரணமாகும். எனவே, ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிப்பது அவசியமாகும்.
- பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில் து பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும். பற்களை அதிக நேரம் தேய்த்தால் ஈருகளில் இரத்தக் கசிவு உண்டாகும்.
- கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவை பற்சிதைவைத் தூண்டும் காரணிகள். இவற்றை சாப்பிடும் போது கவனமாக இருந்தால், பற்சிதைவுக்கான வாய்ப்புகள் குறையும்.
- பற்சிதைவு ஆரம்பத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி போலப் பல்லின் மேற்பரப்பில் தோன்றும். இந்த நிலையிலேயே பல் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால் மேற்கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாதுகாக்கலாம்.
- பற்சொத்தை அதிகமாகி , நரம்பு வரையிலும் பற்சிதைவு ஏற்பட்டிருந்தால் பற்களைப் பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் உருவாகும். ஆனால் அதற்கு முன்பே பல் மருத்துவரை நாடினால், வேர் சிகிச்சை (Root canal treatment) மூலம் பல்லைப் எடுக்காமல் காப்பாற்ற முடியும்.