திருமணத்தில் மாலை மாற்றுதல்
ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று திருமணத்தில் மாலை மாற்றுதல். மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்கின்றனர் என இந்த பகுதியில் விரிவாக காண்போம்.
மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டி முடித்த பின் புரோகிதர் மணமகளை வடக்கு நோக்கி எழுந்து நின்று இறைவனை தியானித்து மணமகன் கழுத்தில் மாலை சூட்டுமாறு கூறுவார். அதே போல மணமகன், மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவான். தம்பதிகள் இருவரும் 3 முறை மாலைகளை மாற்றி கொள்வார்கள். இதன் அர்த்தம் இருமனங்களும் இணைந்து ஒரு மனமாகி இல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக மாலை மாற்றிக் கொள்கின்றனர்.
மாலையை எப்படி மாற்ற வேண்டும்?
மணமகனானவன் நல்ல நாளான இந்நாளில் இறைவனின் திருவருளால் நம் உற்றார், உறவினர்கள், குலதெய்வம் அறிய, நான் தமிழ் முறைப்படி உன்னை திருமணம் செய்து கொண்டேன். அதற்கு அடையாளமாக இந்த மலர் மாலையை நான் உனக்கு சூட்டுகிறேன். இல்லறமான நல்லறத்தை இனிதே என்றும் நாம் இருவரும் இணைந்து நடத்துவோம் என கூறி மணமகளுக்கு மாலையை மாற்ற வேண்டும்.
மணமகளானவள் நல்ல நாளான இந்நாளில் இறைவன் திருவருளால் நம் உற்றார், உறவினர்கள், குலதெய்வம் அறிய நான் தமிழ் முறைப்படி உங்களைத் திருமணம் செய்து கொண்டேன். அதற்கு அடையாளமாக இந்த மலர் மாலையை சூட்டுகிறேன். இல்லறமான நல்லறத்தை இனிதே என்றும் நாம் இருவரும் இணைந்து நடத்துவோம் என கூறி மணமகனுக்கு மாலையை மாற்ற வேண்டும்.
இடம் மாறி அமர்தல்
மணமக்கள் மாலை மாற்றிக் கொண்ட பின், இருவரின் வலது கையிலும் சிறிது மஞ்சள் அரிசி கொடுத்து கைகளை இணைத்து பசி, பிணி இன்றி, வளத்துடன் சிறந்து வாழ்க, வாழ்க! என்று கூறி வாழ்த்தி, இணைந்த கைகளுடன் 3 முறை வலம் வந்து, கணவன் மனைவியானதற்கு அடையாளமாக மணமக்களை இடம் மாற்றி அமரச் செய்ய வேண்டும்.
தாலி கட்டும் போது கையில் விளக்கு ஏந்தி நிற்பது ஏன்?
தாலி கட்டும்போது கையில் விளக்கு ஏந்தி ஒருவர் நிற்பார். இது எதற்காக எனில் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சாட்சியாவார். மேலும் திருமணத்தின் போது எந்தவித சகுன தடைகளும் ஏற்படாமல் இருக்க இதை செய்கின்றனர்.
மணமக்களை ஆசீர்வாதம் செய்வது ஏன்?
திருமணம் முடிந்த பின் மணமக்கள் இருவரும் ஒன்றாக பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவர். மணமக்களை கிழக்கு திசை நோக்கி நிற்க வைத்துக் புரோகிதர் பிரார்த்தனை செய்து மந்திரம் சொல்லி மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்வர். தொடர்ந்து மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், வயதில் மூத்தவர்கள் சபையில் மணமக்களை ஆசீர்வதிப்பார்கள். மணமக்கள் அனைத்து செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக ஆசீர்வாதம் செய்கின்றனர்.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.