ஜாதக யோகங்கள்
இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்னென்ன மாதிரியான ஜாதக யோகங்கள் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.
யோகங்கள் அத பலன்களுக்கு ஏற்ப ஒருவனை உயர்ந்த நிலையிலும் வைக்கும், ஒருவரை அதல பாதாளத்திலும் தள்ளும். இது அவரவர் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையை பொருத்து மாறுபடும். அதன்படி பல்வேறு யோகங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பார்த்து வருகிறோம். இந்த பகுதியில் அவற்றில் சிலவற்றை பார்ப்போம்,
பிரம்மா யோகம் :
குரு, சுக்கிரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது 10ம் வீட்டிலோ அமர்ந்தால் பிரம்மா யோகம் உண்டாகிறது.
பிரம்மா யோகத்தின் பலன்கள் :
இவர்கள் கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். மேலும் நீண்ட ஆயுள் உடையவர்கள். எல்லோராலும் மதிக்கப்படும் கீர்த்தி உடையவர்கள். பெருமையாவும் அடையக் கூடியவர்கள்.
வசீகர யோகம் :
புதன், சுக்கிரன் மற்றும் சனி என மூன்று கிரகங்களும் ஒரே வீட்டில் இருந்தால் வசீகர யோகம் உண்டாகிறது.
வசீகர யோகத்தின் பலன்கள் :
இவர்கள் நல்ல அழகு மிக்கவர்கள். மற்றவர்களை எளிதில் கவரும் முக வசீகரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
காம யோகம் :
7ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், எழில் சுபர் பார்வை அமைவதும் உண்டாவது காம யோகம் ஆகும்.
காம யோகத்தின் பலன்கள் :
நல்ல மனைவி நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். எதிர்பார்த்த இல்வாழ்க்கை நல்ல முறையில் அமையும்.
கௌரி யோகம் :
லக்னத்திற்கு 10ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் உள்ள கிரகம் உச்சம் பெற்று லக்னாதிபதியுடன் இணைந்திருந்தால் கௌரி யோகம் உண்டாகிறது.
கௌரி யோகத்தின் பலன்கள் :
இவர்கள் நல்ல சிந்தனைகள் உடையவர்கள் மற்றும் செல்வ வளம் உடையவர்கள். கீர்த்தியுடன் வாழக்கூடியவர்கள். நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் தான் இந்த யோகம் பலன் தரும்.
மாருத யோகம் :
3, 6 மற்றும் 11ம் அதிபதிகள் ஏதேனும் ஓர் இல்லத்தில் ராகு உடன் இணைந்து இருக்கும் போது சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால் மாருத யோகம் உண்டாகிறது.
மாருத யோகத்தின் பலன்கள் :
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
சுமத்திர யோகம் :
லக்னத்தில் கேது அமர்ந்து 7ம் வீட்டில் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8ம் வீட்டில் சூரியன் இருந்தால் சுமத்திர யோகம் உண்டாகிறது.
சுமத்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சிறு தொழில்கள் மற்றும் சிறு பகுதிகளுக்கு உயர் அதிகாரியாக மாறும் வாய்ப்புகள் உண்டாகும்.
அசுபர யோகம் :
லக்னத்தில் குருவும், சந்திரனும் இணைந்து இருந்து, லக்னாதிபதி சுப கிரகத்துடன் இணைந்து இருக்க அசுபர யோகம் உண்டாகிறது.
அசுபர யோகத்தின் பலன்கள் :
இந்த யோகம் 40 வயதுக்கு மேல்தான் செயல்பட ஆரம்பிக்குமாம். இந்த யோகத்தால் அரசியலில் ஈடுபாடும், உயர்ந்த பதவி, பெரும் பாக்கியமும் உண்டாகிறது.
யௌவன யோகம் :
லக்னத்திற்கு 2ம் வீட்டில் சுப கிரகம் இருந்து 2ம் அதிபதிக்கு உரிய கிரகம் பலம் பெற்றிருந்தால் அமைவது யௌவன யோகம் ஆகும்.
யௌவன யோகத்தின் பலன்கள் :
கல்வி ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள். சுகபோக வாழ்க்கை பெற்று வாழ்வார்கள்.
சாமர யோகம் :
குரு 1,4,7,10 போன்ற கேந்திர இடங்களில் இருந்து லக்னம் சர லக்னமாக இருக்க, லக்னாதிபதி மறைவு வீடுகளில் அமர்ந்து இருந்தால் சாமர யோகம் உண்டாகிறது.
சாமர யோகத்தின் பலன்கள் :
நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு ஆகியன அமையும்.
நாக யோகம் :
9ம் வீட்டில் குருவும் 9ம் இடத்திற்கு உரியவர் 7லிலும் அமர்ந்து இருக்க சந்திரன் சுப கிரகங்களுடன் இணைந்து இருப்பது அல்லது சுப கிரகங்கள் பார்வை பெற்று இருப்பது நாக யோகம் ஆகும்.
நாக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
உயர் கல்வியில் விருப்பம் உடையவர்கள். சகல வசதிகளுடன் வாழக்கூடியவர்கள். நல்ல கல்வி உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், சகல வசதி மிக்கவர்.
சுலபமாக சம்பாதிக்கும் யோகம் :
லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகிறது.
சுலபமாக சம்பாதிக்கும் யோகத்தின் பலன்கள் :
அதிக முயற்சியோ உழைப்போ இன்றி சுலபமாக நிறைய பொன், பொருள் போன்றவற்றை இந்த யோகம் பெற்றவர்களால் ஈட்ட முடியும்.
அவயோக காலசர்ப்ப யோகம் :
1,4,7,1௦ போன்ற கேந்திர வீடுகளில் ராகு மற்றும் கேது அமைய பெற்றிருந்தால் அவயோக காலசர்ப்ப யோகம் உண்டாகிறது.
அவயோக காலசர்ப்ப யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
ஏற்ற தாழ்வுகளை கொண்ட வாழ்க்கை முறையை உடையவர்கள். வாழ்வில் பல சோதனைகளையும் ஏற்ற தாழ்வுகளையும், திடீர் சரிவு, விபத்து போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.
வெளிநாடு செல்லும் யோகம் :
9 மற்றும் 1௦`ம் அதிபதிகள் கடகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வீடுகளில் இடம் பெற்றோ அல்லது 9 மற்றும் 10ம் அதிபதிகள் பலம் பெற்று இருப்பினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.
வெளிநாடு செல்லும் யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
9 மற்றும் 10ம் அதிபதிகளின் திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
குபேர யோகம் :
2ம் அதிபதி 9ல் இருந்தாலும் அல்லது 2ம் வீட்டில் 9 மற்றும் 11ம் அதிபதி இருந்தால் குபேர யோகம் உண்டாகிறது.
குபேர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
அளவுக்கு அதிகமான தனவரவு உண்டாகும். மேலும் கோடி, கோடியாக சம்பதிப்பர்
ஞாபக மறதி யோகம் :
5ம் அதிபதி மறைவு வீடுகளில் இருந்தாலோ அல்லது 5ம் அதிபதி பலம் இழந்து இருந்தாலோ ஞாபக மறதி யோகம் உண்டாகிறது.
ஞாபக மறதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இந்த யோகம் அமைய பெற்றவர்கள் உடனுக்குடன் எதையும் மறந்துவிடும் இயல்புடையவர்கள்.