கோலத்தின் பாரம்பரியமும் அதன் சிறப்புகளும்
எந்தவொரு மங்கள நிகழ்வையும் அழகாக்குவது முதலில் அங்கு இடப்படும் கோலம்தான். பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேஷம் என்றாலும் அவற்றில் முக்கியமாக இடம்பெறுவது கோலமாகும். அதிலும் முக்கியமாக பெண்கள் கோலம் போடும் கலையே தனி. கோலம் போடுவதின் பாரம்பரியமிக்க பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து, பார்க்க தெளிவாக, அழகாக இருக்கும். கோலம், தீய மற்றும் துஷ்ட சக்திகளை, வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும்.
கோலம் என்பது அரிசிமாவு, சுண்ணாம்பு , சுண்ணாம்பு தூள் அல்லது பாறைப் பொடியைப் பயன்படுத்தி இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ வண்ணப்பொடிகளைப் பயன்படுத்தி போடப்படுவது கோலம்.
மகாராஷ்டிராவில் ரங்கோலி, மிதிலாவில் அரிபன், கர்நாடகாவில் ஹேஸ் மற்றும் ரங்கோலி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முகுலு என்றழைக்கப்படுகிறது.
கோலம் போடுவதால் அதிகாலை காற்றை சுவாசித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். காலையில் குனிந்து, நிமிர்ந்து, பெருக்கி கோலமிடுவதால் உடல் இயக்கத்திற்கு நல்ல பயிற்சியாக அமையும். ரத்த ஓட்டத்தை சீராக்கி, இடுப்பு, கை, முதுகு பக்கத்திற்கு நல்ல நெகிழ்வைத் தருகிறது.
கோலத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு வைக்கும் புள்ளி, அதை இணைக்கும் கோடுகள், டிசைனை போடும்போது நம் சிந்தனை ஒருநிலைப் படுவதோடு, சிந்தனை சிதறல்களைத் தவிர்க்க உதவுகிறது.
கண்பார்வையை கூர்மையாக உதவுகிறது. கால்களுக்கு வலுவைக் தந்து மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. கோலமிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மறதியை குறைக்க உதவுகிறது. பசு சாணத்தில் வாசல் தெளிக்கும்போது வாசல் மணமாக, அழகாவதுடன் கிருமிகளை வீட்டிற்குள் அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.
விரல்களால் கோலமிடும்போது கை,விரல்களுக்கு அன்றாட பயிற்சியாகி நரம்பு மண்டலத்தை ஊக்குவித்து நன்றாக செயல்பட உதவுகிறது. கற்பனைத் திறனைமேம்படுத்தி, புத்துணர்வை தரும். கோலமிடுவதால் புத்தி கூர்மை, ஞாபகத்திறன் அதிகரிப்பு, உற்சாகம், செயலில் கவனம், பொறுமை, பிரச்னைகளை கையாளும் திறன் மேம்படுகிறது.
வாசலில் கோலமிடுவதுபோல பூஜையறையில் போடும் மூன்று விதமான கோலங்களால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஐஸ்வர்ய கோலம்:
இக்கோலத்தை பச்சரிசிமாவில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜையறையில் போட லட்சுமி கடாட்சம் அதிகரித்து ,சகல ஐஸ்வர்யங்களையும் தரும்.
ஹ்ருதய கமலக் கோலம்:
அஷ்ட ஐஸ்வர்யத்தையும்,செல்வத்தையும் பெருக்கக் கூடியது. இந்தக் கோலம். ஆரம்பத்தில் கஷ்டம் என நினைப்பவர்களுக்கு போடப்போட எளிதாக இருக்கும். இதை வாசலில் போடாமல், பூஜையறையில் மட்டுமே போட வேண்டும். சகல சம்பத்தும் கிடைக்கும் இந்த கோலத்தை வெள்ளிக்கிழமைகளில் போட்டு பலன் பெறலாம்.
லட்சுமி குபேர கோலம்:
இக்கோலம் மிகவும் விசேஷமானது. இந்தக் கோலத்தையும் பூஜையறையில் போட விசேஷமான பலன்களை பெறலாம். செல்வ வளத்தை அள்ளித் தரும் இந்தக் கோலத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், முக்கிய பண்டிகைகளின்போது போட்டு பூக்களால் அலங்கரிக்க சிறப்பான பலன்களை பெறலாம். மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட நல்ல பலன் கிடைக்கும்.
வாசலில் தெய்வ உருவங்கள் படங்கள் வரைவதை தவிர்க்க வேண்டும்.கால்பட்டு அழிவது மிதிபடுவது நல்லதல்ல.
வாசலில் போடும் கோலம் பளிச்சென்று இருக்க கோலமாவுடன் பச்சரிசி மாவு கலந்து போட வேண்டும்.
மாக்கோலம் போடும் முன் மாவில் தனித்தனியாக கலர் சேர்த்து கோலமிட டைல்ஸ் தரையிலும் பளிச்சென்று இருக்கும்.
கலர் கோலம் போட்டவுடன், பார்டர் கொடுத்துவிட்டு ஓரத்திலோ, நடுவிலோ அதன் மினியேச்சர் கோலத்தைபோட அழகாக காட்டும்.
மார்கழிமாதம் அதிகாலையில் வாசலில் கோலமிட்டு பின் அகல் விளக்கேற்றி வைக்க ஐஸ்வர்யம் பெருகி இல்லம் சிறக்கும்.