சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. சித்தர்கள் எழுதி வைத்த ஓலைச்சுவடியில் உள்ள மருத்துவ குறிப்புகளின் படி மனித உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்துகள் உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பது ஆதாரபூர்வமானமான உண்மை.
சித்த மருத்துவம் என்பது ஒரு மூலிகை மருத்துவம் (Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் இன்றளவும் உள்ளது. சில சமுக ஊடகங்கள் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில வகை மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என கூறுகின்றன. இது முற்றிலும் தவறான கருத்து. சித்த மருத்துவம் என்பது வெறும் மூலிகைகளை மட்டும் கொண்டது அல்ல. சித்த மருத்துவத்தில் கீழ்கண்ட பொருட்களும் உபயோகப்படுத்தபடுகின்றன.
சித்த மருத்துவ பொருட்கள்
சித்த மருத்துவத்தில் மூலிகைகள் தவிர, உலோகங்கள், உப ரசங்கள், தாது உப்புக்கள், நவமணிகள், பஞ்சசூதப் பாசாணங்கள் (Arsenic), மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.
சித்த மருத்துவத்தில் உலோகங்கள் என எடுத்துக் கொண்டால் இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால் கந்தகம், வெள்ளைப் பாசாணம், மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தாது உப்புகள் என எடுத்துக்கொண்டால் இந்துப்பு (Rock Salt), கல்லுப்பு, சீனாக்காரம் (Aluminum potassium sulphate), சூடம் (camphor), நவச்சாரம் (Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு (Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் 120 வகையான உபரசங்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த பாதரசம், ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.
பக்க விளைவுகள் ஏற்படாது
சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருப்போம். இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால், அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாதா? பாதுகாப்பானதா? என நீங்கள் சிந்திக்கலாம். இதற்கான விடை சித்த மருத்துவம் என்பது நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனெனில் ஒவ்வொரு மருந்து பொருளையும் பயன்படுத்துவதற்கு முன் அது முழுமையாக சுத்தி (Purification) செய்யப்படுகிறது. அதாவது மூலபொருட்களிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் ‘சுத்தி’ எனப்படுகிறது.
இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள் (Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகளாகும்.
இது தவிர உயிரினங்களிலிருந்து மருந்து பொருட்களை தயாரித்து பயன்படுத்துகிறது சித்த மருத்துவம். உதாரணத்திற்கு ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவையும் சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சித்த மருத்துவத்தின் உண்மை இவ்வாறு கடல் அளவு இருக்க ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்கள் மிகவும் தவறானது. இனி அடுத்து வரும் கட்டுரைகளில் ஒவ்வொரு சித்த மருந்தின் பயன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.