சகட தோஷம்
சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச் செல்லும் என்பது சகடை அல்லது சகட தோஷத்தின் அர்த்தமாகும். இந்த சகட தோஷம் உள்ளவர்கள் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் இரண்டற கலந்து இருக்கும். இவர்களின் வாழ்க்கையில் நிரந்தர இன்பமும் இல்லை, நிரந்திர துன்பமும் இல்லை.
சகட தோஷத்தை எவ்வாறு அறிவது
ஒருவரின் ஜாதகத்தில் 6ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும், குரு நின்ற ராசிக்கு 6, 8, 12 ஆகிய ராசிகளில் சந்திரன் இருந்தாலும் அது சகட தோஷம் அல்லது சகடை தோஷம் ஆகும்.
சகட தோஷத்தால் உண்டாகும் துன்பங்கள்
சகட தோஷம் உள்ளவர்கள் பணம் கையில் தங்காது மற்றும் படிப்பிற்கேற்ற தகுந்த வேலை கிடைக்க மிகவும் சிரமப்படுவார்கள். பதவிகள் கிடைத்தாலும் அது நிரந்திரமாக இருக்காது. எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் எளிதில் வெற்றி கிடைக்காது. வெற்றி கிடைக்க நிறைய போராட வேண்டி இருக்கும்.
நிலையான வாழ்க்கை அமையாது
இந்த தோஷ அமையப்பெற்றவர்கள் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வேலை பார்க்க முடியாது. வேறு வேறு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பார்கள் அல்லது அலைந்து கொண்டே இருப்பார்கள். வாழ்க்கை வண்டிச்சக்கரம் போல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும்.
சகட தோஷ பரிகாரங்கள்
சகட தோஷம் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் ‘ஓம் நமசிவாய நம” என்று 108 முறை வாழ்நாள் முழுவதும் சொல்லி வர வேண்டும். அப்படி சொல்லி வந்தால் கெடு பலன்கள் ஏற்படுவது குறையும். பச்சரிசி தவிடு, அகத்திகீரையை பசு மாட்டிற்கு ஒன்பது நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து அந்தப் பசுவை வணங்கி வந்தால் அவர்களுக்கு சகட தோஷம் விலகி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
மேலும் சகட தோஷம் உள்ளவர்கள் வருடந்தோறும் நடைபெறும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டத்தை கண்டால் சகட தோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறுவர். இந்த தோஷம் உள்ளவர்கள் யானை முடியை மோதிரமாக செய்து விரலில் அணிந்து வரலாம்.