தோஷங்களும் பரிகாரங்களும்
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
செவ்வாய் தோஷம்
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷம் இருப்பவர்களையே திருமணம் செய்வது நல்லது.
செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர தோஷத்தின் தாக்கம் குறையும். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக் கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
இராகு-கேது தோஷம்
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் இராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. காளாஸ்திரி சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வந்தால் அம்மன், துர்க்கை, சரபேஸ்வரர் இவர்களுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் விலகும்.
ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். காஞ்சீபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும்.சர்ப்ப தோஷம் விலகும்.திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது சிறந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை இராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.
சூரிய தோஷம்
ஜாதக கட்டத்தில் லக்னத்திற்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். சூரிய தோஷம் இருப்பவர்கள், சூரியனின் அருள் பெற அனுமன் வழிபாடு செய்வது அவசியம்.ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டிற்கு கோதுமையால் செய்த உணவை அளிக்கலாம். சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் படிப்பது அல்லது கேட்பது நல்லது
சூரிய தோஷம் இருந்தாலும் சரி சூரிய தோஷம் இல்லாதவர்களும் சரி, சூரிய உதயத்திற்கு முன் எழுந்து தங்களுடைய பணிகளை துவங்குவதால் சூரியனின் அருளை முழுமையாகப் பெறலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
களத்திர தோஷம்
களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். களத்திர தோஷம் உள்ளவர்கள் குரு ஆதிக்கம் அதிக அளவு நிறைந்த புனித ஸ்தலங்களுக்கு சென்று வந்தால் திருமணத்தடை விலகும்.
வயதான மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம். திருமண பரிகார திருத்தலம் என்று போற்றப்படுகிற தலம் திருமணஞ்சேரி. இது கும்பகோணம் ஆடுதுறை அருகில் உள்ள அற்புதமான திருத்தலம். ஒருமுறை இங்கு சென்று இறைவனையும் அம்பாளையும் வணங்கி வந்தாலே, திருமண பாக்கியம் விரைவில் கைக்கூடி வரும்.