தந்தூரி சிக்கன்
தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1. கோழி கறி – 4 (தொடை பகுதி)
2. எண்ணெய் – தேவையான அளவு
3. கேசரி பவுடர் – அரை சிட்டிகை
4. மைதா மாவு – 50 கிராம் அளவு
5. கடலை மாவு – 50 கிராம் அளவு
6. தந்தூரி சிக்கன் மசாலா – 50 கிராம்
7. எலுமிச்சை பழம் – 1
8. இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு
10. முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும் போதும்)
11. மிளகுதூள் – 1 மேஜைக்கரண்டி
12. கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி
செய்முறை
1. கோழி கறியை (தொடை பகுதி) நன்கு சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து சிறிது கீறல் போடவும். அப்போதுதான் கறியில் மசாலா நன்கு சேரும்.
2. ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, தந்தூரி சிக்கன் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. மேலே சொன்ன கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் சிறிது கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்த கோழி கறியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
4. பின்பு அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானவுடன் கறியை அதில் போட்டு சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
5. கறியை அவ்வப்போது இருபக்கமும் திருப்பி திருப்பி போட வேண்டும். இதை செய்யும்போது குறைவான தீ இருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல் கறி கருகிவிட வாய்ப்பு உண்டு.
6. கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அனைத்து கறியை எடுத்து விடவும்.
7. இப்போது சுவையான தந்தூரி சிக்கன் தயார்.