அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்
நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன. இந்த வரிசையில் அரிசி கழுவிய தண்ணீரும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் கடைகளில் வாங்கும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களில் அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நம்மில் பலரும் அறியாத உண்மையாகும். அரிசி கழுவிய தண்ணீரை உடனடியாக பயன்படுத்துவதை விட மறுநாள் புளிக்க வைத்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
அரிசி கழுவிய தண்ணீரில் பல்வேறு சத்துக்குள் அடங்கியுள்ளன. அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி நம் உடலை பொலிவுடன் வைத்துக்கொள்ள முடியும். தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் இந்த அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுகிறது. தலை முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பின் அரிசி தண்ணீர் கொண்டு அலசினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அழகிற்காக மட்டுமல்லாமல் மூட்டு வலி, கை கால் வலி, வீக்கம் போன்றவற்றுக்கு அரிசி கழுவிய தண்ணீர் ஒரு சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும், சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும்போதும் அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி கழுவ வேண்டும்.
சிறு குழந்தைகள் நடை பழகும் போது கால்கள் வலுப்பெற அரிசி கழுவிய தண்ணீரை சூடு செய்து வெதுவெதுப்பாக ஊற்றுவார்கள். அரிசி கழுவிய தண்ணீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அரிசியை ஊறவைத்து கழுவிய தண்ணீர், சோறு வடித்து எடுக்கப்பட்ட சூடான கஞ்சி என இரண்டுமே சருமம் மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்
சருமம் பளிச்சிட:
அரிசி கழுவிய தண்ணீர் சருமத்தின் மீது ஆரோக்கிய நிறத்தை மேம்படுத்துகிறது. அதனால்தான் தற்போது விற்கப்படுகிற நிறைய அழகுசாதனப் பொருட்களில் அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
உடைந்த சருமம்:
அரிசி தண்ணீரை நீண்டநேரம் வைத்தால் புளித்துவிடும். இந்த புளித்த தண்ணீர் சூரிய புற ஊதாக்கதிர்களால் உடைந்த சரும செல்களை சரி செய்கிறது. மேலும் இது சருமத்தின் மிருதுத்தன்மையை அதிகரித்து முகச்சுருக்கத்தை தடுக்கும் கொலஜன் அளவை அதிகரிக்கிறது. இதனால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
வறண்ட சருமத்திற்கு:
சரும வறட்சி அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். அதிக அளவில் சோப்புகளை பயன்படுத்துவதால் அவை நம் முகத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து சருமத்தை வறண்டு போக செய்கிறது.. இதனால் முகத்தில் எரிச்சலும் வறட்சியும் ஏற்படுகிறது. அரிசி கழுவிய தண்ணீரை நாம் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.
முகப்பருக்கள் :
அரிசி தண்ணீர் சருமத்தை மிருதுவாக்குகிறது. இது முகப்பருக்கள், கருந்திட்டுக்கள், அலர்ஜி மற்றும் அரிப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.
அரிசி தண்ணீரை பயன்படுத்தும் வழிகள்:
- க்ளென்சர் மற்றும் டோனராக அரிசி தண்ணீரை பயன்படுத்தலாம்.
- ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்தினால் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது.
- அரிசி தண்ணீருடன், சிறிது உப்பு, சிறிது எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து உடல் முழுவதும் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம்.
- அரிசி தண்ணீர் சன் ஸ்க்ரீனாகவும் பயன்படுகிறது. கடைகளில் விற்கப்படுகிற சன் ஸ்க்ரீன் லோஷன்களில் மற்ற பொருட்களுடன் அரிசி தவிடு சாறும் கலந்திருக்கிறது. இது UVA/UVB கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.