இந்தப் பொருட்களை கை தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா?
நாம் சில நேரங்களில் கவனக்குறைவாக இருக்கும்போது பொருட்கள் கீழே சிந்துவது சகஜம்தான். இதைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், அவ்வாறு சிந்தும் பொருட்களுக்குக் கூட பெரியவர்களால் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
அரிசி:
அரிசி கைத்தவறி கீழே கொட்டி விட்டால், குடும்ப சச்சரவு, காரியத்தடை என்று அர்த்தம். நீங்கள் ஏதேனும் புதிதாக தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால் அதில் தடை ஏற்படும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
குங்குமம்:
குங்குமம் கைத்தவறி கீழே சிந்தி விட்டால், அபசகுணம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே குங்குமம் கீழே கொட்டினால், வெற்றி மற்றும் அனுகூலம் பெறப் போகிறீர்கள் என்றே பொருள்.
மஞ்சள்:
மஞ்சள் கீழே கொட்டினால் மங்கலம், சிறப்பு என்று பொருள். ஏதேனும் தொழில் தொடங்கப்போகிறீர்கள் என்றால், அது சிறப்பாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
எண்ணெய்:
எண்ணெய் கைத்தவறி கீழே கொட்டிவிட்டால், அவசெய்தி, இழப்பு என்று பொருள். நீங்கள் ஏதாவது தொழில் செய்பவராக இருந்தால், அதில் பொருள் நெருக்கடி, தடை, மற்றவர்கள் உங்களை குறை சொல்வது போன்ற விஷயங்கள் நடக்கும்.
பால்:
சில சமயம் பால் காய்ச்ச எடுக்கும்போது கைத்தவறி கீழே கொட்டிவிடும். இன்னும் சில நேரங்களில் பூனை பாலை தட்டிவிட்டு விடும். அதற்கான பொருள் கலகம், தோல்வி என்பதாகும்.
சர்க்கரை:
சர்க்கரை கீழே சிந்துவதால் நல்ல பலனே சொல்லப்பட்டிருக்கிறது. சர்க்கரை தரையில் சிந்துவதால், புகழ் ஏற்படுவதோடு, நாம் செய்யும் தொழிலில் மேன்மை ஏற்படும் என்பதே பொருள்.
தேங்காய்:
தேங்காய் கைத்தவறி கீழே விழுவதால், நீங்கள் செய்யக்கூடிய செயலில் ஏற்படவிருக்கும் தடை அனைத்தும் நீங்கும், தொழில் செய்பவர்களுக்கு பண வரவு அதிகமாகும் எனப் பொருள்.
பூக்கள்:
பூக்கள் கைத்தவறி கீழே விழுந்தால் காரிய வெற்றி, பக்தி, நலம் என்று பொருள். அதாவது வாசனையுள்ள மலர்கள் கீழே கொட்டினால், செல்வம், சுகம் பெறுவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
உப்பு:
உப்பு கீழே சிந்தினால் நல்லதல்ல என்று பெரியவர்கள் சொல்வார்கள். உப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாக சொல்லப்படுகிறது. எனவே, உப்பு கீழே சிந்திவிட்டால், பண விரயம், பணத்தடை ஏற்படப் போவதாகப் பொருள்.