ஜாதிக்காய் வரலாறு
ஜாதிக்காய் முதன் முதலில் மொலுக்கஸ் தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஜாதிக்காய் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘nutmeg’ என்று அழைக்கப்படுகிறது.
ஜாதிக்காய் வளரியல்பு
ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் விளைவிக்கபடுகிறது. இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரமாகும். ஜாதிக்காய் மரம் சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். ஜாதிக்காயில் ஆண் மற்றும் பெண்மரம் என இரண்டு வகைகள் உண்டு. இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.
ஜாதிக்காய் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகள் முளைக்க 6 வாரங்கள் ஆகும். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு தயாராகின்றன. ஒரு மரத்திலிருந்து 2000 முதல் 3000 காய்கள் வரை கிடைக்கும்.
ஜாதிக்காயில் பயன்படும் பாகங்கள்
ஜாதிக்காய் கொட்டை, ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ ஜாதிப்பத்திரி, அதன் மேல் ஓடு என அனைத்தும் உணவிலும், மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
ஜாதிக்காய் பயன்கள்
ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் பயன்படுகிறது. ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” என்னும் கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.
ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்
உடல் சுறுசுறுப்பாகும்
ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு சரியாகும். விந்து கெட்டிப்படும், உடல் குளிர்ச்சியடையும், இரைப்பை, ஈரல் பலப்படும். செரிமானத்திறன் மிகுந்து உடல் மிகுந்த சுறுசுறுப்படையும்.
வயிற்றுபோக்கு தீரும்
ஜாதிக்காய் தூளை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சனை தீரும்.
வாந்தி பேதி நிற்கும்
ஜாதிக்காயை பாதி உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் வீதம் தண்ணீர் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி, பேதி போன்றவை தீரும்.
தம்பத்திய பிரச்சனை தீர்க்கும்
ஜாதிக்காய் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, விந்து முந்துதலை தடுக்கும். தாம்பத்தியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் சிறந்த தீர்வாகும்.
சரும பிரச்சனைகள் தீர்க்கும்
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் போட முகப்பரு, கரும் புள்ளிகளால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும்.
அம்மை கொப்பளங்களை சரிசெய்யும்
அம்மை நோய் ஏற்பட்டால் உடல் முழக்க கொப்பளங்கள் தோன்றும். அம்மை நோய் மறைந்தாலும் தழும்புகள் உடனடியாக மறையாது. அந்த சமயத்தில் ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால் அம்மை கொப்பளங்கள் குறையும்.
பல் பிரச்சனைகள் தீர்க்கும்
சிலருக்கு பல் வலி ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. அந்த சமயத்தில் பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை தடவினால் பல் வலி பறந்தோடும்.
அஜீரணம் குணமாகும்
அஜீரண பிரச்னையால் அவதிபடுபவர்கள் ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம் எடுத்து நன்றாக தூள் செய்து உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் பிரச்சனை சரியாகும்.
நல்ல தூக்கத்தை கொடுக்கும்
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.
நரம்பு தளர்ச்சி நீங்கும்
ஜாதிக்காய் மற்றும் பிரண்டை உப்பை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நரம்பு தளர்ச்சி பிரச்சனை தீரும்.
தொண்டை சதையை குறைக்கும்
ஒரு சிலருக்கும் தொண்டையில் சதை வளரும். அப்படிப்பட்டவர்கள் ஜாதிக்காய் சிறிது எடுத்து கொண்டு அதனுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் மிளகு இரண்டு பங்கு சேர்த்து தூளாக அரைத்து கொள்ள வேண்டும். அந்த பொடியில் 2 அல்லது 3 சிட்டிகை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் 2 அல்லது 3 மாதங்களில் சதை வளர்ச்சி குணமாகும்.
கண் பார்வை தெளிவடையும்
பார்வை திறன் சரியாக இல்லாதவர்கள் இரவில் தூங்கும் முன்பு ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி பற்றுப் போட்டு விட்டு காலையில் எழுந்தவுடன் முகம் கழுவி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.