திருமணத்தில் அம்மி மிதித்தல்
இந்து திருமணங்களில் பல்வேறு சடங்கு, சம்பிரயதயங்கள் அந்த காலம் முதல் தற்போது வரை வழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல சடங்கு சம்பிரதாயம் தற்போது வழக்கில் இல்லா விட்டாலும் முக்கியமான ஒரு சில சடங்குகளை மக்கள் இன்றளவும் தம் குடும்ப திருமணங்களில் செய்து வருகின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று ‘திருமணத்தில் அம்மி மிதித்தல்’ மற்றும் அருந்ததி பார்த்தல். இந்த சடங்கை ஏன் செய்கிறார்கள் என்பது பல பேருக்கு இன்று வரை தெரிவதில்லை. இந்த அம்மி மிதித்தல் சடங்கை ஏன் செய்கிறார்கள் என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நான்கு வாழ்கை முறைகள்
இந்து மதத்தில் ‘பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம், என்று நான்கு வாழ்க்கை முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் கிரகஸ்தம் என்னும் இல்லறமே மிகவும் சிறந்ததென்று கௌதம முனிவர் கூறியுள்ளார். சிறப்புமிக்க கணவன் மனைவி எனும் பந்தத்தை வலுப்படுத்த திருமணத்தில் சில சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அம்மி மிதித்தல் ஆகும். அதன்படி திருமண சடங்கில் மணமகன் ஆனவன் மணமகளின் வலது கால் கட்டை விரலைப் பிடித்து, அம்மிக்கு வலது புறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறார்.
இதன் அர்த்தம் இந்த கல்லின் மீது நீ ஏறி நிற்பாயாக, இந்தக் கல்லைப் போல் நீ மனம் கலங்காமல் திருமண வாழ்வில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களை பொறுத்து கொள்ள வேண்டும். இன்பமோ, துன்பமோ வாழ்வில் எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக் கொள் என்று கூறி மனோதத்துவ அடிப்படையில் மணமகன், மணமகளுக்கு மனோபலம் அளிக்கிறான்.
அம்மியை ஏன் உபயோகிக்க வேண்டும்
எந்த ஓர் உலோகத்தையும் விடவும் கல்லானது மிகவும் உறுதியானது. கல்லை உலோகம் போல வளைக்கவோ, உருக்கவோ முடியாது. மணமகளுக்கு கல் போன்று உறுதியான நெஞ்சம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சடங்கிற்கு மிக உறுதியான கல்லால் செய்த அம்மியை உபயோகிக்கிறார்கள்.
இந்து மதத்தில் எந்த ஒரு காரியமும் காரணமின்றி செய்வதில்லை. அதன் உண்மையான அர்த்தம் தெரியாதலால் நாம் அவற்றை மூடநம்பிக்கை என்கிறோம். ஆனால் எல்லா விதமான காரியத்திற்கு பின்னாலும் ஒரு வலுவான காரணம் உண்டு என்பது மறுப்பதற்கில்லை.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.