ஆவாரம் பூ
ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன்படுகிறது. ஆவாரையின் முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.
ஆவாரை பூ நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக மருத்துவத்தில் பயன்படுகிறது. ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ?” என்பது மிக பிரபலமான சித்த மருத்துவப் பழமொழியாகும். ஏனெனில் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டது ஆவாரம்.
ஆவாரையின் வேறு பெயர்கள்
ஆவாரையானது தலபோடம், ஆகுளி, ஆவீரை, மேகாரி, ஏமபுட்பி, போன்ற பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் வேர், இலை, பூ, பட்டை, விதை என அனைத்தும் மருத்துவ பயன்பாடு கொண்டது.
ஆவாரம் பூவின் மருத்துவப் பயன்கள்
நரம்பு தளர்ச்சி நீங்கும்
ஆவாரம் பூக்களையும், இலையையும் காய வைத்து பொடி செய்து, காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும். ஈரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும். நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெறும்.
நீரிழவு நோய் குணமாகிறது
இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய பேருக்கு நீரிழவு நோய் ஏற்படுகிறது. தொடக்க நிலையில் இருக்கும் நீரிழிவு பிரச்சனை முழுமையாக குணமாவதற்கு ஆவாரையின் விதைகள் பயன்படுகிறது.
இரத்தம் சுத்தமாகும்
ஆவாரம் பூ, இலை, பட்டை, காய், பிசின் ஆகிய ஐந்தையும் காய வைத்துப் பொடித்து சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துக்கு ஆவாரை பஞ்சகம் என்று பெயர். இந்தப் ஆவார பஞ்சக பொடியை தினமும் இரண்டு வேளை, இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.
சீதபேதி குணமாகும்
ஆவாரம் வேரைச் சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து 50 மில்லி அளவு சாப்பிட்டால் சீதபேதி உடனே குணமாகும். மேலும் ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து உண்டு வந்தால் உடல் பலமடையும்.
சருமம் பிரகாசமடையும்
சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போன்ற தோற்றம் உண்டாகும். அவ்வாறானவர்கள் ஆவாரம் பட்டை கஷாயம் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்படைந்து முதுமை தோற்றம் ஏற்படாது.
மதுவை மறக்க செய்யும்
இன்றைய இளைஞர்கள் முதல் வயதான பெரியோர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். அவர்கள் மதுவை மறக்க முயற்சித்தாலும் அவர்காளால் முடியாமல் ஒரு கட்டத்தில் மதுவை மீண்டும் தொடுகின்றனர். அவ்வாறானவர்கள் ஆவாரம் பட்டை பொடி 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மது மீதான மோகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், தாகம் போன்றவை குணமாகும்.
சீறுநீரக கோளாறுகளை சரிசெய்கிறது
ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி, கண், மூலம், நாள்பட்ட புண்கள், சிறுநீரகக் கோளாறுகள், வெள்ளை வேட்டை நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
தோல் வெடிப்பு குணமாகும்
ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணை போன்றவைகளை சேர்த்து ஆவாரைத் தைலம் காய்ச்சி, அதை தோலில் தடவி வந்தால் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் போன்றவை குணமாகும்.
குழந்தை பேறு உண்டாகும்
பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் ஆவாரை பயன்படுத்தலாம். கருப்பட்டியுடன் ஆவாரைப் பூவை சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு இருந்த மலட்டுத் தன்மை நீங்கி விரைவில் கர்ப்பம் தரிக்கும் நிலை உண்டாகும்.