அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா
அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர், கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ பயன் கொண்டதாகும். ஆசிய நாடுகள் அனைத்திலும் பெரும்பாலும் வளரும். வெப்ப மண்டல பிரதேசங்கள், மற்றும் காடுகளில் வளரும் தன்மை உடையது.
அமுக்கிராக்கிழங்கின் பண்புகள்
இது கசப்புச் மற்றும் துவர்ப்பு சுவையும், உஷ்ண வீரியமும் கொண்டு இருக்கும். அத்துடன் இதில் உடலை வளர்க்கும் வேதியியல் பொருள்களும், புரதங்களும், அமினோ அமிலங்களும் உள்ளது. அறிவியல் ஆய்வுகளின் மூலம் அமுக்கிராங்கிழங்கு பக்க விளைவுகள் இல்லாத மிகவும் பயன்தரக் கூடிய ஒரு மூலிகை மருந்தாக அறியப்படுகிறது.
அமுக்கிராக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
காயங்களை குணமாக்கும்
அமுக்கிராக்கிழங்கின் சாறு இருமல், இழுப்பு, வெண் குஷ்டம், க்ஷயம், நஞ்சு, இரணங்கள் ஆகியவற்றை குணமாக்கும். மேலும் அதன் சாற்றை தேன், நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் வலிப்பு நோய் நீங்கும்.
நரம்பு தளர்ச்சியை நீக்கும்
அமுக்கிராக் கிழங்கின் சாறு பாலுணர்வு, ஞாபக மறதி, தாய்ப்பால் சுரப்பு, நரம்புத் தளர்ச்சி, உடல் இளைப்பு ஆகியவற்றுக்கு நல்ல நிவாரணியாக அமைகிறது. மேலும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் விந்தணுக்களின் பலத்தை அதிகரித்து மலட்டுத் தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. அமுக்கிராங்கிழங்கு தாது வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்புத் தளர்ச்சி போன்றவற்றை குணபடுத்தும்.
வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது
அமுக்கிரா கிழங்கு பழமாகும் சூழலில் அல்லது பழுத்த நிலையில் உடல் நலம் தேறுவதற்கும் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும், உடலின் திசுக்களை சரிப்படுத்தவும் உதவுகிறது.
படுக்கை புண்களை குணமாக்கும்
நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு படுக்கை புண்கள் உருவாகும். அப்படிப்பட்டவர்கள் அமுக்கிராகிழங்கு சூரணத்தை பாலில் கலந்து வீக்கம், படுக்கைப் புண்கள் இருக்கும் இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வர படுக்கை புண்கள் விரைவில் குணமாகும். மேலும் நீண்ட நாட்களாக இருக்கும் கல்லீரல் நோய்களை குணமாக்கவும் அமுக்கிராக் கிழங்கு பெரிதும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
அமுக்கிராக் கிழங்கை குழந்தைகளுக்குத் கொடுத்து வந்தால் குழந்தைகள் திடகாத்திரமாக வளர்வார்கள். மேலும் அமுக்கிராக் கிழங்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
மலட்டு தன்மை நீங்கும்
அமுக்கிராக் கிழங்கு கஷாயத்தை இளஞ் சூட்டில் நெய்ப்பக்குவமாக செய்து மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட்டு வந்தால், மலட்டு தன்மை நீங்கிப் பிள்ளைப் பேறு உண்டாகும்.
வீக்கங்களை குறைக்கும்
அமுக்கிராக் கிழங்கின் தூளை பசுவின் சிறு நீருடன் அரைத்துப் பயன்படுத்தினால், மிகவும் முற்றிய பெருவயிறு, கிருமி நோய், வீக்கம் ஆகிய அனைத்தையும் குணமாகும். மேலும் வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.
தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யும்
நம் உடலில் ஜி4 ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால் தைராய்டு பிரச்சினை ஏற்படும். இந்த ஹார்மோனை அஸ்வகந்தா மருந்து அதிகரிக்கிறது என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.