செவ்வாய் தோஷம்
திருமணத்திற்கு வரன் பார்த்து பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கப்படும் ஒரு விஷயம் பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். இந்த செவ்வாய் தோஷம் கிட்டத்தட்ட பலருடைய வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் காரணத்தால் பல பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையில் திருமணம் உரிய வயதில் நடக்காமல் தடைப்படுவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கண்கூடாக பார்க்கலாம்.
செவ்வாய் தோஷத்தை எவ்வாறு அறிவது
ஜாதகத்தில் லக்னமானது, சந்திரன், சுக்கிரன் ஆகியவை 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பதும் ஒருவகையில் தோஷம்தான்.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்
சில ஜாதகங்களில் செவ்வாய் தோஷ இருந்தாலும் அதில் சில விதிவிலக்குகள் உள்ளதாக ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றை பற்றி சிறிது விரிவாக காண்போம்,
1. ஜாதகத்தில் லக்னமானது, சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாயின் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம், உச்ச வீடான மகரம் என்று இருந்து அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் இல்லை. மேலும் அந்த இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. மேலும் அந்த இடங்களில் உள்ள செவ்வாய்க்கு சூரியன், குரு, சனி ஆகியவர்களின் பார்வை பட்டிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
2. லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
3. செவ்வாய் இருக்கக்கூடிய 2- இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் அந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை.
4. செவ்வாய் 4-ல் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளாக இருந்தால் அது செவ்வாய் தோஷ ஜாதகம் இல்லை.
5. களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானமானது கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் அது செவ்வாய் தோஷம் இல்லை.
6. செவ்வாய் இருக்கும் 8-வது இடமானது தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த செவ்வாய் தோஷம் இல்லை.
7. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயானது சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
8. சந்திரனுடன் சேர்ந்து மேலே சொன்ன எந்த இடத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
9. மேலே சொன்ன இடங்களில் செவ்வாய் இருந்து புதன் அல்லது சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோஷம் இல்லை.
10. மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் இந்த தோஷத்தைக் குறிப்பிடும் 8-ம் இடமாகவோ அல்லது 12-வது இடமாகவோ இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
11. சனி, ராகு, கேது ஆகியோருடன் சேர்ந்திருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
12. செவ்வாய்க்கு நட்பு கிரகங்களான சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சந்திரனின் ஆட்சி வீடான கடகம், குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, அந்த இடம் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7,8, 12 ஆகிய இடங்களாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும்போது மணப்பெண் அல்லது மணமகன் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றவர்க்கு தோஷம் இல்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.