காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 பானங்கள்
காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை தவிர்த்து இந்த ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பானங்களை குடிப்பதால் உடல் பருமன், கொலஸ்ட்ரால், நீரிழிவு , உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். நோய் வராமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்கிறது.
வெந்தயம்
வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இது சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தீர்வாக உள்ளது. அத்துடன் உடல் சூட்டை தணிக்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது.
இஞ்சி சாறு
இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். தினமும் இப்படிச் செய்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சீராகும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசன வாயில் புண் உள்ளவர்கள் இதனை இஞ்சி சாறை அருந்துவது தவிர்க்கவும்.
நெல்லிக்காய் சாறு
தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், ‘ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.
நீராகாரம்
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்தினால் உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரம் உடற்தசைகளுக்கு வெகுவிரைவில் சத்துக்களை கொண்டு சேர்ப்பதுடன் கொழுப்பு, கொலஸ்ட்ரால் சேராமல் உடலைப் பாதுகாக்கிறது. வளரும் குழந்தைகள் முதல் வயோதிகர்கள்வரை அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக நீராகாரம் உள்ளது.
அருகம்புல் சாறு
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதும் கூட நல்லதே. இது அல்சருக்கு அருமருந்து. ஆனால், அதே சமயத்தில், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல.
அருகம்புல் தண்டு மட்டும் தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.