காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ?
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சமயம் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர். அதற்கு அந்த ஆடுகள் காபிச் செடியின் இலைகளையும், அதன் பழங்களையும் சாப்பிட்டதே காரணம் என்று கண்டறிந்தனர்.
அதையடுத்து, அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த காபிச் செடியின் இலைகளையும், பழங்களையும் சாப்பிட்டு காபி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர். எத்தியோப்பியாவிலிருந்து எகிப்து, ஏமன் என்று பரவிய காப்பி 15-ஆம் நூற்றாண்டில் தான் பெர்சியா, துருக்கி என்று ஐரோப்பாவை அடைந்தது.
காபி என்றால் அதில் “காபீன்” மட்டும் தான் என்று பெரும்பாலோர் நினைக்கின்றோம். காபியில் இருக்கும் 2000 வேதிபொருட்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மருந்துக் குணங்கள் உண்டு. காபியில் உள்ள பாலிஃபீனால் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுவதாக பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டன் பல்கலைக் கழக ஆய்வு தெரிவிக்கிறது.
காப்பி விளைச்சலில் உலகளவில் முதலிடம் வகிப்பது பிரேஸில், இரண்டாவது இடம் வியட்நாம். காப்பிச்செடியில் பல வகைகள் இருந்தாலும், அதில் பருகுவதற்கு ஏற்ற வகைகளாக “அராபிக்கா”, கன்னபோரா, ரோபோஸ்டா போன்ற வகைகள் இருக்கிறது. உலகிலேயே மிக விலை உயர்ந்த காபியாக “கோப்பி லுவாக்” என்று அழைக்கப்படுகிற காபி இந்தோனேசியாவில் தான் தயாராகிறது.
இந்நிலையில், காபி குடிப்பது எதற்காக? காபி குடிப்பதால் என்ன நன்மை? என்ன தீமைகள் ஏற்படுகிறது? காபி குடிப்பதால் முகப்பரு வருமா என்றும் பார்க்கலாம்.
காபி குடிப்பது எதற்காக
பெரும்பாலானவர்கள் சோர்வாக உணரும் போது காபி குடிக்க வேண்டும் என நினைப்பதுண்டு.
காபி குடித்ததும் உற்சாகமாக உணர்வதற்கு காரணம், மனிதனின் நரம்பு மண்டலத்தை தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் அவற்றில் இருக்கின்றன.
மேலும், காபியில் இருக்கிற காபீன் என்கிற வேதிப்பொருளானது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.
மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது. காபி குடித்தால் தான் அன்றைய நாளே நன்றாக அமையும் என்று நினைப்பவர்களும் உண்டு. அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் இரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரத்தசோகை ஏற்படலாம்.
காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விரிவடையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காக குடிக்கப்படும் காபியின் அளவு, அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி ஏற்படலாம்.
சிலருக்கு தூக்கத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். இன்னும் சிலருக்கு நேரத்திற்கு காபி குடிக்கவில்லை என்றால் பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.
காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா?
நாம் விரும்பி அருந்தும் காபி கூட முகப்பரு வருவதற்கு காரணமாக அமைகிறது. சிலர் காபி பிரியராக இருப்பர். அப்படிபட்டவர்கள் அதிகமாக காபி குடிக்கும் போது முகப்பரு வரும் வாய்ப்புள்ளது.
முகப்பரு வருவதற்கு காரணமாக இருப்பது ஹார்மோனின் சமநிலையற்ற தன்மை. ஆகவே தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் அருந்தும் காபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டி விடுகிறது. அதுவே தேவை இல்லாத கலோரிகளை உடலில் அதிகரித்து முகப்பரு வர காரணமாகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிகமாக நாம் காபி அருந்தும் போது அது விரைவில் ஜீரணமாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதாவது அதிக காபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும்.
அதனால் நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இதனால் உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போகும் போது கூட முகப்பரு வர அதிக வாய்ப்புகள் உள்ளது.