காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது
நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும் போது, அன்று நல்ல நாளாக அமைய வேண்டும், மகிழ்ச்சிகரமான நாளாக அமைய வேண்டும் என்று எண்ணுவது வாடிக்கையான ஒன்று. இரவு தூங்கி மறுநாள் எழுவோம் என்பது நிச்சயம் இல்லாத ஒன்றாகும். ஒவ்வொரு நாள் தூங்கி எழுவதும் நாம் புதிதாக பிறப்பதற்கு சமமாகும். எனவே ஒவ்வொரு நாளையும் நாம் புதிய நாளாகவே கருத வேண்டும்.
ஆழ்ந்த தூக்கம் என்பது மரணத்திற்கு நிகரான ஒன்றாகும். ஏன் என்றால் நாம் தூங்கும் போது அனைத்து உறுப்புகளும் செயல்படாமல் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற நினைவே இல்லாமல் இருக்கும். எனவே நாம் தூங்கி எழும் ஒவ்வொரு நாளும் புதிய நாளாகும்.
அவ்வாறு நாம் தூங்கி எழும் போது நாம் பார்க்கும் முதல் விஷயம் நல்லதாக அமைய வேண்டும். காலையில் எழுந்தவுடன் சில பொருட்களை பார்ப்பதால் அன்றைய நாள் புத்துணர்வுடன் இருக்கும் என்று கூறுவார்கள். நாம் எழுந்தவுடன் எதை பார்க்கின்றோமோ அதன் தாக்கம் அந்த நாள் முழுவதும் இருக்கும்.
காலையில் எழுந்ததும் பார்க்க வேண்டியவை
- காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு உள்ளங்கையை பார்ப்பது அன்றைய நாள் முழுவதும் சிறப்பாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். ஏனெனில் நம் உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் காலையில் எழுந்ததும், நம்முடைய உள்ளங்கையை பார்ப்பதை பழகிக் கொள்ள வேண்டும்.
- தூங்கி எழுந்ததும் மற்றவர்களை பார்ப்பதை விட நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது சிறப்பானதாகும்.
- தெய்வ படங்களையும், விக்கிரகங்களையும் பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டத்தையும் நல்ல சிந்தனைகளும் உண்டாக்கும்.
- செல்வத்தை அள்ளித்தரும் மகாலக்ஷ்மியின் உருவத்தை பார்ப்பது அன்றைய நாள் முழுவதும் பணக்கஷ்டம் இல்லாமல் பண வரவை அதிகரிக்கும்.
- நமக்கு தெரிந்த சில மந்திரங்களை சொல்லிவிட்டு பின் படுக்கையில் இருந்து எழுவது மிகவும் சிறந்ததாகும். இதனால் அன்றைய நாள் முழுவதும் சிறப்பானதாக அமையும்.
- சுடர் விட்டு எரியும் தீப ஒளியை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
- பூரண கும்பம் பார்க்கலாம், கோயில் கோபுரத்தை பார்க்கலாம், கோயில் மணி, பசு மாடு, கன்றுக்குட்டி, இயற்கை அழகு, இயற்கை காட்சி, அருவிகள், மலர்கள், அர்ப்புதமான இசைக்கருவிகள், மங்களகரமான பொருட்களான மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட பொருட்களை பார்ப்பதும் சிறப்பு வாய்ந்ததாகும்.
- காலையில் கணவன் மனைவி முகத்திலும் மனைவி கணவன் முகத்திலும் விழிப்பதும் அன்றைய நாளை நல்ல நாளாக அமைய காரணமாக இருக்கும்.
காலையில் எழுந்ததும் பார்க்க கூடாதவை
- கண் விழித்ததும் அபசகுணமான வார்த்தைகளைப் பேசுவதும், கேட்பதும் சண்டை போடுவதையும் தவிர்ப்பது நல்லது.
- ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் சுவாலைகள் இவைகளை கட்டாயம் விழித்தவுடன் பார்க்கவே கூடாது. இவை எதிர்மறை எண்ணங்களை உருவாக்கக் கூடும்.
- கண் விழிக்கும் போதே யாரையும் திட்டிக் கொண்டோ சண்டை போட்டுக் கொண்டோ எழுந்தரிக்க கூடாது.
- படுக்கையில் இருந்து அவசர அவசரமாக பதறி எழுந்திருப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு எழுவது நம் மூளை நரம்புகளில் பாதிப்பினை ஏற்படுத்தும்.