கர்மவினை எப்படி ஏற்படும்?
நாம் முற்பிறவியில் செய்த பாவ , புண்ணியங்களை வைத்து தான் இப்பிறவியில் அதற்க்கான கர்ம பலன்களை அனுபவிக்கிறோம். உலகில் ஒரே நேரத்தில் பிறக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே செல்வந்தர்கள் வீடுகளில் அனைத்து சுக, போகங்களுடன் பிறக்கின்றன. பெரும்பாலான குழந்தைகள் நடுத்தர வர்க்கத்திலும், இன்னும் ஒரு சில குழந்தைகள் ஏழை, எளியவர்கள், தினக்கூலிகள் ஆகியோர் வீட்டிலும் பிறக்கின்றன.
இவ்வாறு குழந்தைகள் பாரபட்சமாக பிறப்பதற்கு, அதனதன் கர்மவினைகளே காரணமென இந்து மதம் கூறுகின்றது. இந்த கர்மவினை என்பது எப்படி ஏற்படுகிறது என பெரும்பாலானோருக்கு தெரியாத நிலையில் அது குறித்து தெரிந்து கொள்வோம்.
அன்னதானம்
கிஷ்கிந்தாபுரம் என்ற நாட்டை ஆண்டுவந்த மன்னன், தினந்தோறும் நாட்டு மக்களுக்கு தானம் செய்தும், அன்னதானம் வழங்கியும் வந்தான். அதற்காக ஒரு பெரிய பரந்த இடத்தில் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள் அன்னதானம் வழங்குவதற்கான உணவை தினமும் தயார் செய்வது வழக்கம்.
அவ்வாறு ஒரு நாள் அன்னதானத்திற்கான உணவை அவர்கள் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு, ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் அங்கிருந்த ஒரு பாத்திரத்தில் விழுந்தது. அதை அறியாத சமையல்காரர்கள் விஷம் விழுந்திருந்த பாத்திரத்தில் உள்ள உணவை வந்திருந்தவர்களுக்கு பரிமாறினார்கள்.
யார் காரணம்
அன்னதானத்தில் கலந்து கொண்ட ஒரு அந்தணன், விஷம் கலந்த உணவை சாப்பிட்டதன் காரணமாக உயிரிழந்தான்.
அதையடுத்து அந்தணனின் ஆன்மாவை எமலோகத்தின் பணியாளர்கள், எமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு நிறுத்தினர்.
இந்நிலையில் அந்தணன் உயிரிழந்ததற்கான கர்மவினையை யார்மீது சுமத்துவது என்று சித்திரகுப்தனுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் அதற்கான தண்டனையை யாருக்கு வழங்குவது என்று தெரியாமல் விழித்தான்.
இதில் பாம்பின்மீது குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது.
கழுகின்மீதும் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து சென்றது.
உணவு பரிமாறிய பணியாளர் மீதும் குற்றம் கிடையாது. தயாரித்த உணவை மன்னன் சார்பாக வழங்கினான்.
மன்னன் காரணமானவனா என்றால், அன்னதானம் செய்யவேண்டும் என்று நினைப்பவனுக்கு புண்ணியம்தான் கிடைக்குமே தவிர பாவம் சேராது.
அப்படியானால் அந்தப் பாவம் யாரை சேரும்? என்று குழம்பிய சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான்.
வீண்பழி சுமத்துவோர்
இது குறித்து சிந்தித்த எமதர்மனும், சித்திரகுப்தா இதைப் பற்றி கவலைப்படாதே, இந்தக் கர்மவினைக்கான தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது நேரத்தில் உனக்கு தெரியவரும் என்று கூறினான்.
அப்போது, கிஷ்கிந்தாபுரத்தின் அருகில் இருந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அரண்மனைக்கு செல்ல வழி தெரியாமல் தேடினர்.
அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர்.
அந்தப் பெண்ணும் சரியான வழியை கூறுவதற்காக தனது கை விரலை நீட்டி காட்டினாள். அத்துடன் அரண்மனைக்கு செல்பவர்களிடம், பார்த்து கவனமாக இருங்கள். இந்த மன்னன், யாசகம் கேட்டு வருபவர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது என்று வீண்பழி சுமத்தி பேசினாள்.
அதைக்கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில், அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை விதித்தான்.
இதிலிருந்து நம் எல்லோருக்கும் தெரிவிக்கப்படும் நீதி என்னவென்றால், யாருக்கும் துன்பம் கொடுக்காதவர்கள் மீது, உண்மை தெரியாமல் வீண்பழி சுமத்தி புரளி பேசினால் கர்மவினைகளை அனுபவிக்க வேண்டிவரும்.
எனவே நாம் அனைவரிடமும் உண்மையாகவும் , நேர்மையவகவும், இருப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர் மீது வீண் பழி சுமத்தி , அவர்களை பற்றி அவதூறாக பேசுவதும் பெரும் பாவமாகும்.